/

முதல்வர் தொடங்கி வைத்த கல்லூரியின் அவலநிலை

சென்னை : முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட அரசு கல்லூரி முழுவதும் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  குடிகாரர்களின் கூடாரமாக கல்லூரி மாறியிருப்பதோடு, அருகிலுள்ள குடிநீர் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:17 pm

சென்னை : முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட அரசு கல்லூரி முழுவதும் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 குடிகாரர்களின் கூடாரமாக கல்லூரி மாறியிருப்பதோடு, அருகிலுள்ள குடிநீர் பகிர்ந்தளிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கல்லூரி குளம்போல் மாறியுள்ளது என கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 சென்னை வியாசர்பாடியில் உள்ளது டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி. முதல்வர் கருணாநிதி முன்னிலையில்

 15-8-1972-ல் அடிக்கல் நாட்டப்பட்ட இக் கல்லூரி, 14-7-1974-ல் அவராலேயே திறந்தும் வைக்கப்பட்டது.

 இப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கீழ்த்தட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்லூரி ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே, கல்லூரி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த கீழ்த்தட்டு மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், அண்மைக்காலமாக கல்லூரி சீரழிவின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.

 குடிகாரர்களின் கூடாரம்: கல்லூரி முடிந்தபின் இரவு நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும் கல்லூரி மைதானம் மற்றும் வாகன நிறுத்தங்களில் அப் பகுதியைச் சேர்ந்த சிலர் கும்பலாக அமர்ந்தபடி மது அருந்துகின்றனர். காலி மது பாட்டில்களை, கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.

 இவை அப்புறப்படுத்தப்படாததால், மாணவர்களும் அதைப் பார்த்து கெட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக தொடர்ந்து போலீஸில் புகார் தெரிவிக்கப்படுகிறது. போலீஸôர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தபோதும், போலீஸôர் சென்றபின் மீண்டும் அவர்கள் வந்துவிடுகின்றனர். போலீஸில் புகார் செய்வதற்காக கல்லூரி காவலரை இவர்கள் கடுமையாக மிரட்டுவதோடு, மறைந்திருந்து கற்களாலும் தாக்குகின்றனர் என கல்லூரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 மேலும் கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திலிருந்து இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டுமான உபகரணங்களையும் இவர்கள் திருடிச் செல்வதால், கட்டுமான பணி முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 கல்லூரி சுற்றுச் சுவரை உயர்த்தி, அதற்கு மேல் முள் வேலி அமைப்பதன் மூலமே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும் கல்லூரியில் ஒரே ஒரு இரவுக் காவலர் இருப்பதால், இதுபோன்ற சமூக விரோதிகளை சமாளிக்க முடிவதில்லை. எனவே காவலரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்லூரியின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, இதற்கு போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 குளமாக மாறிய கல்லூரி: மேலும், கல்லூரிக்கு அருகில் உள்ள குடிநீர் பகிர்ந்தளிப்பு நிலைய கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறுவதால் கல்லூரி வளாகம் முழுவதும் குளம்போல் மாறியுள்ளது. பல நாள்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம் சேதமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 இதனால், சுகாதார சீர்கேடு அடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே, கல்லூரி வளாகத்தில் கழிவுநீர் புகாமல் தடுத்திட அதிகாரிகளுக்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.