திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரி கடல் பகுதியில் "தூண்டில் வளைவு' அமைக்க வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை அரை நூற்றாண்டு காலமாகியும் நிறைவேறவில்லை.
கடற்கரையை அரித்து, அலைகள் இப்போது வீடுகளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதால் மீனவர்கள் ஆபத்தின் விளிம்பில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இம் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் முக்கியமான ஒன்றான உவரியில் சுமார் 1,500 மீனவ குடும்பங்கள் உள்ளன. இங்கு சுமார் 200 வள்ளங்களை வைத்து மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
அடிக்கடி கடல் அரிப்புக்கு இலக்காகி வரும் உவரியில் 1950-களில் அன்றைய தொழில்நுட்பத்தில் "தூண்டில் வளைவு' ஒன்று அமைக்கப்பட்டது. அது நிலைபெறாததால் நிலையான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
1986-ல் தூண்டில் வளைவு அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரூ.90 லட்சத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அதுவும் கைகூடவில்லை. இதற்கிடையே கடல் அரிப்பு சற்று குறைந்ததால் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், 1996-க்கு பிறகு மீண்டும் கடல் அரிப்பு அதிகரித்தது. வீடுகளை நோக்கி வரும் அலைகளைத் தடுக்க மீனவர்களே மணல் மூட்டைகளை கரையில் அடுக்கிவைத்து பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.
2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு தொடர்ந்து கடல் அரிப்பு அதிகமாக உள்ளது.
""கடற்கரையோரம் உள்ள வீடுகளில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த கடலில், கடந்த ஏழெட்டு மாதங்களாக அதிகமான அலைகள் உருவாகி முதலில் கரை அரிக்கப்பட்டது. அடுத்து, கடற்கரையோரம் நிழலுக்காக வைக்கப்பட்டிருந்த 4 வரிசை மரங்களில் 3 வரிசை மரங்களும் சாய்ந்தன. கரையோரம் இருந்த கிணறும், அதற்கடுத்து அந்தோணியார் ஆலயம் முதல் கப்பல் மாதா ஆலயம் வரை போடப்பட்டிருந்த தார்சாலையும் அரிக்கப்பட்டு அலைகள் அடித்துச் சென்றுவிட்டன. 2 சமுதாய நலக்கூடங்களும் இடிந்து விழுந்துவிட்டன. இப்போது வீட்டு முற்றத்தில் அலை அடிக்கிறது'' என்றனர் சே. வருவேல் (52), ரா. லிம்ரோஸ் (28).
உவரியில் சிறப்பு பெற்ற அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கப்பல் மாதா ஆலயம் வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடற்கரையோரம் சுமார் 700 வீடுகள் உள்ளன. கடல் அரிப்பால் இந்த வீடுகளுக்கும், அவற்றில் வசிப்போருக்கும் பாதுகாப்பு இல்லை. சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
""எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். சுனாமியின் கோரம் நினைவுக்கு வருகிறது. இரவு நேரங்களில் ஆண்களும், பெண்களும் அந்தோணியார் ஆலயம் மற்றும் பள்ளிக்கூடங்களில் சென்று தூங்குகிறோம். மாலை நேரமாகிவிட்டால் குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே வரவிடமாட்டோம்'' என்று பெ. ராணி (60), பா. பாபு (30) கூறினர்.
கடல் அரிப்பு தீவிரம் அடையும்போது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்ப்பதும், உடனே தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறிச் செல்வதுமாக காலங்கள் கடந்து கொண்டிருக்கிறதே தவிர பயன் எதுவும் இல்லை என்ற விரக்தி மீனவ மக்களின் பேச்சுகளில் ஒலிக்கிறது. உவரியில் மீன் இறங்குதளம் கட்டுவதற்கு அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்குப் பதிலாக தூண்டில் வளைவை அமைக்கும்படியும் மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். அதுவும் நடைபெறவில்லை.
இந்த முறை கடல் அரிப்பு தீவிரமடைந்தவுடன் எஸ்.எஸ். ராமசுப்பு எம்.பி., மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர். தூண்டில் வளைவு அமைக்க ரூ. 8.25 கோடி கேட்டு அரசுக்கு கருதுரு அனுப்பியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனினும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து உடனடி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ரூ. 4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஆட்சியர்.
""இது தாற்காலிக தீர்வுதான். உவரி மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு உடனடியாக தூண்டில் வளைவை அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலான இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது'' என்றார் மூன்றாவது முறையாக உவரி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் எஸ்.வி. அந்தோணி.
இதனிடையே, அலை தடுப்புச் சுவர் அமைக்க அரசு ரூ. 4.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், அதனால் பயன் ஏற்படாது என்பதோடு படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும் எனக் கூறி அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் மீன்வளத் துறையினர் கூறுகின்றனர்.
இப்போது ரூ. 8.25 கோடியில் தூண்டில் வளைவை அமைப்பதற்கான திட்டத்தை மீண்டும் மீன்வளத் துறை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளது. பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பிடம் சில விளக்கங்களை நிதித்துறை கேட்டுள்ளது. அதற்கு திருப்திகரமான விளக்கத்தை பொதுப்பணித் துறை அளித்தால் திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முறையாவது "தூண்டில் வளைவு' திட்டக் கனவு நனவாக வேண்டும் என்பது மீனவர்கள் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


