சமூக விரோதிகள் கூடாரமாகும் வேளாண் கட்டடங்கள்!

நாமக்கல்: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் உரிய பயன்பாடில்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. நாமக்கல்-கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நூலகம், உழவர் சந
சமூக விரோதிகள் கூடாரமாகும் வேளாண் கட்டடங்கள்!
Updated on
1 min read

நாமக்கல்: நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேளாண்மைத் துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் உரிய பயன்பாடில்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

நாமக்கல்-கோட்டை சாலையில் உள்ள மாவட்ட நூலகம், உழவர் சந்தை, வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே உள்ளது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

பத்துக்கும் மேற்பட்ட அறைகளுடன் 2 அடுக்கு மாடியுடன் கூடியது இக்கட்டடம். இதன் அருகில் வேளாண்மை அலுவலர் குடியிருப்பு உள்ளது.

இந்தக் குடியிருப்பில் 2 வீடுகள் உள்ளன. கடந்த 30.6.1988-ல் அப்போதைய நாமக்கல் நகராட்சித் தலைவர் மு. பழனிவேலன் தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எப். பாரூக்கி, இதைத் திறந்து வைத்தார்.

இப்போது, இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பழைய ஆவணங்கள், பயன்படுத்தாத தளவாடப் பொருள்கள் இந்த வீடுகளில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன. கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்துள்ளன. இதே நிலையில் அலுவலர் குடியிருப்புக் கட்டடமும் காட்சியளிக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு மிகவும் வசதியாக மாறியுள்ளது. நகரின் மையத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இக்கட்டடத்துக்கு அருகில் கமலாலய குளம் மட்டுமே உள்ளது. வேளாண்மைத் துறை கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் இந்தப் பகுதிக்கு மக்கள் யாரும் வருவதில்லை.

இதைச் சாதகமாகப் பயன்படுத்தி மாலை நேரத்தில் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது மற்றும் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளுக்கு இப்பகுதி பெரிதும் பயன்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக போதிய விளக்குகளும் அங்கு இல்லை.   

இதனைப் பயன்படுத்திச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் இங்கு முகாமிட்டுள்ளனர்.

பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்படாமல் இருப்பதுடன், சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அச்சாரமாக இக்கட்டடங்கள் இருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது.

நகரில் பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் சூழலில் இந்தக் கட்டடங்களை பழுது பார்த்தோ, புதுப்பித்தோ அரசு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com