நெல் விவசாயிகளுக்கு ரூ. 210 கோடி இழப்பீடு
சென்னை, டிச. 27: தமிழக நெல் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட மகசூல் இழப்புக்காக ரூ. 210 கோடி இழப்பீடு வழங்க இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (அக்ரிகல்ச்சர் இன்சுரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா) செவ்வாய்


சென்னை, டிச. 27: தமிழக நெல் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட மகசூல் இழப்புக்காக ரூ. 210 கோடி இழப்பீடு வழங்க இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (அக்ரிகல்ச்சர் இன்சுரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்காக ரூ. 209 கோடியே 20 லட்சமும், கோடைக் காலத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்காக ரூ. 1 கோடியே 17 லட்சமும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 56 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு மழை, வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற காரணங்களால் மகசூல் பாதிப்பு ஏற்படும்போது வேளாண் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்குகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 7 லட்சத்து 68 ஆயிரத்து 803 நெல் சாகுபடி விவசாயிகள் சேர்ந்தனர். இவர்களில் பலருக்கு கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை சார்பில் மகசூல் இழப்பீடு மதிப்பீடு செய்யப்பட்டு, வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மூலம் இழப்பீட்டுக்கான முறையீடு புது தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய வேளாண்மை அமைச்சகம் மற்றும் பயிர்க் காப்பீடு வழங்குவதற்கான இயக்குநர்கள் குழு இழப்பீடு முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்தன. எனினும், வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.
இறுதி ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அண்மையில் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயிர்க் காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பும், போராட்டங்களும் நடத்தினர்.
இந்தச் சூழலில், தமிழக நெல் விவசாயிகளுக்கு ரூ. 210 கோடியே 38 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்து இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் ராய் தில்லியில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்துக்குள் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் சி. அன்பரசு கூறியதாவது:
நெல் விவசாயிகளுக்கு ரூ.210 கோடி இழப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளிடம் ரூ.64 கோடி பிரிமியமாக வசூல் செய்துள்ளோம். இந்தத் தொகை, மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.73 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ.73 கோடி ஆகிய மூன்றும் சேர்த்து விவசாயிகளுக்கு ரூ.210 கோடி வழங்கப்படும்.
எங்கள் தலைமை அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மாநில அரசின் பங்குத் தொகை ரூ.73 கோடியை வழங்குமாறு கேட்டு இப்போது தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தமிழக அரசிடமிருந்து அந்தத் தொகை கிடைத்த பின் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
எனினும், விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட பிரிமியம் மற்றும் மத்திய அரசின் பங்குத் தொகை ஆகியவை சேர்த்து ரூ.137 கோடிதான் எங்களிடம் உள்ளது. இந்தத் தொகையை அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை அனுப்பி விடுவோம். இத் தொகை உடனடியாக விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் தமிழக அரசு ஆர்வமாக உள்ளது. ஆகவே, இந்த வார இறுதிக்குள் எல்லா விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை கிடைத்து விடும் என்றார் அன்பரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...