அழிவை நோக்கி விவசாயத் தொழில்?
பொன்னேரி, ஜன. 31: பொன்னேரி தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாறி வருவதன் காரணமாக இப்பகுதியில் விவசாயத் தொழில் வேகமாக அழிவை நோக்கி சென்று


பொன்னேரி, ஜன. 31: பொன்னேரி தாலுகாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாறி வருவதன் காரணமாக இப்பகுதியில் விவசாயத் தொழில் வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகா சென்னை புறநகர் பகுதியை ஒட்டியுள்ளது.
பொன்னேரி தாலுகாவில் சோழவரம், மீஞ்சூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும், ஆரணி, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய மூன்று பேரூராட்சிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.
இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் காட்டுபள்ளி, காளாஞ்சி, பழவேற்காடு ஆகிய பகுதிகள் கடலோரப் பகுதிகளாக விளங்கி வருகிறது. கடலோரப் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அதே போன்று ஆரணி பேரூராட்சிக்குட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள விளைநிலங்களில் 10ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத் தொழில் செய்து வந்துள்ளனர்.
மீஞ்சூர் பகுதியை ஒட்டி 100-க்கும் மேற்பட்ட தனியார் கன்டெய்னர் கிடங்குகள் வந்ததன் காரணமாக மீஞ்சூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத் தொழில் முடங்கி போனது.
அதே போன்று அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், மெரட்டூர், தோட்டக்காடு, வாயலூர், திருவெள்ளைவாயல், ஊரணம்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் விவசாயத் தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக மாறியதால் சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் 4 ஆழ்துளை மோட்டார்கள் அமைக்கப்பட்டு அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சோழவரம் பகுதியை ஓட்டி செங்குன்றம் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. அதே போன்று பொன்னேரியில் 30-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு, தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது.
இதனால் பொன்னேரி இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களால் வாங்கப்பட்டு அவைகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. வீட்டுமனைகளாக மாறிவரும் விவசாய விளை நிலங்கள், புதிதாக தொடங்கப்படும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் காரணமாக பொன்னேரி தாலுகாவில் விவசாயம் செய்வதற்கு விளைநிலங்களே இல்லாத நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என அப்பகுதியில் வசிக்கும் சமூக நல ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே 100 நாள் வேலை உறுதி திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, மேலும் பருவம் தவறி பெய்யும் மழையால் அழுகி போகும் நெல் பயிர்கள் உள்ளிட்டவைகளால் விவசாயத் தொழில் செய்து வரும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப விளைநிலங்கள் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயிகள் பயிரிடவில்லை என்றால் மக்கள் பசியை தீர்ப்பது எப்படி?
எனவே பொன்னேரி தாலுகாவில் அழிந்து வரும் விவசாயத்தை காப்பாற்ற அனுப்பம்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர அப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை பராமரிப்பு செய்து தூர்வார வேண்டும்.
மேலும் அப்பகுதியில் புதிதாக குளங்களை அமைக்க வேண்டும். அத்துடன் சோழவரம், பொன்னேரி பகுதியில் நாள்தோறும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக உருவாகி வருவதை கட்டுப்படுத்த அரசு தவறினால் எதிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறி பொன்னேரி தாலுகாவில் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...