

சேலம், ஜன. 8: நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மாநில மாநாடு சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் ஏதாவது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது.
லஞ்சம், லாவண்யம், ஊழலற்ற ஆட்சி, வறுமை இல்லா தமிழகம், வளமான எதிர்காலம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை 14.9.2005 அன்று மதுரையில் விஜயகாந்த் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய பின், 2006 சட்டப்பேரவை தேர்தல், அதே ஆண்டின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவை பொதுத் தேர்தல் என 3 முக்கியத் தேர்தல்களை தே.மு.தி.க. சந்தித்துள்ளது.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. அத்தேர்தலில் கட்சியின் தலைவரான விஜயகாந்த் மட்டும் விருத்தாசலம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மாநிலம் முழுவதிலும் தே.மு.தி.க. பெற்ற வாக்கு சதவீதம் என்பது அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அத்தேர்தலில் 3 தொகுதிகளில் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. 8 தொகுதிகளில் 15 முதல் 20 சதவீத வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10 முதல் 15 சதவீத வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7 முதல் 10 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.
இந்த தேர்தல் முடிவு, தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. இனி தவிர்க்க முடியாத சக்திகளில் ஒன்று என்பதை உறுதி செய்தது.
தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் தே.மு.தி.க. கணிசமான வாக்குகளைப் பெற்றது. கடைநிலை அமைப்புகளுக்கான வார்டு உறுப்பினர்களாக ஏராளமான தே.மு.தி.க.வினர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளின் தலைமையிலான ஏதேனும் ஒரு அணியோடு கூட்டணி வைத்து விஜயகாந்த் தேர்தலைச் சந்திப்பார் என பரவலாகப் பேசப்பட்டது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் வரை இந்த பேச்சு நீடித்தது.
எனினும், காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த், இந்தத் தேர்தலிலும் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்று கூறி எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தார்.
தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. சராசரியாக 10 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்நிலையில், இனியும் தனித்துப் போட்டியிடுவது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்ற கருத்து தே.மு.தி.க.வினர் மத்தியில் பரவலாக எழுந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்தும் இதை புரிந்து கொண்டதாக தெரிகிறது. எனவேதான், யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த தே.மு.தி.க., 2010 ஜனவரி முதல் வாரம் சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தனது நிலையை மாற்றிக் கொண்டது. 2011 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜயகாந்துக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையுமே கடுமையாக விமர்சித்து வந்த விஜயகாந்த், மெல்ல மெல்ல அ.தி.மு.க. மீதான விமர்சனங்களைக் குறைத்துக் கொண்டார். மாறாக, தி.மு.க. மீதான விமர்சனத்தை மேலும் கடுமையாக்கினார்.
எனவே, அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேரலாம் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே பலரிடம் தொற்றிக் கொண்டது.
இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பும் கூட்டணி எதுவென்று எனக்குத் தெரியும். அதை நான் புரிந்து கொண்டுள்ளேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பதற்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்பேன் என்றார் ஜெயலலிதா.
காங்கிரஸ், பா.ம.க.வுடன் ஜெயலலிதா இப்போது எநதப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதை அந்தக் கட்சியினரே உறுதி செய்தனர். கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் அ.தி.மு.க. தலைமை இப்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதும் அந்தந்தக் கட்சிகளால் உறுதி செய்யப்பட்டது.
எனவே, அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையேதான் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பலராலும் பேசப்பட்டது. அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க.வை கொண்டு வர, பேசப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஏற்கெனவே வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
எனவே, அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. சேரப் போகிறது என்ற கருத்து வலுவடைந்திருக்கும் சூழலில், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை தே.மு.தி.க. மாநாடு நடைபெறுவதால், இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே தே.மு.தி.க. மாநாட்டையொட்டி சென்னையைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் பெயரில் வெள்ளிக்கிழமை மாலை வெளியான பத்திரிகை விளம்பரம் குறித்து சனிக்கிழமை விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த விளம்பரத்தில் அ.தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில் நேரிடையான எந்த வார்த்தைகளும் இல்லை. எனினும், விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமையை விமர்சித்து தே.மு.தி.க. நிர்வாகிகளின் பெயரில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. தே.மு.தி.க.வுக்கும் அந்த விளம்பரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த செயலை செய்த சமூக விரோதிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆக, அ.தி.மு.க.வுடன் எந்த சிறு மோதலும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே, இந்த விளம்பரப் பிரச்னை தொடர்பாக விளக்கமளித்து அறிக்கை விடும் அளவுக்கு விஜயகாந்த் இறங்கி வந்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பாரா என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து மாநாட்டுத் திடலில் கடைசி நேர ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியது:
யாருடன் கூட்டணி என்பது பற்றிய இறுதி முடிவை இந்த மாநாட்டில் விஜயகாந்த் அறிவிக்க மாட்டார். எனினும், வரும் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் தே.மு.தி.க. தேர்தலைச் சந்திக்கும் என்பதை தெளிவுபடுத்துவார். தி.மு.க.வை மிகக் கடுமையாக சாடுவதன் மூலம் யாருடன் கூட்டணி என்பது பற்றிய தகவலை விஜயகாந்த் மறைமுகமாக வெளிப்படுத்துவார்.
எனினும், மாநாடு முடிந்த பின், அடுத்த ஓரிரு வாரங்களில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய தெளிவான அறிவிப்பு நிச்சயம் வெளிவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.