ரயில்வே ஊழியர்களுக்கு இலவச குடும்ப பாஸ்
சென்னை, ஜன. 9: ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்ய ரயில்வே ஊழியர்களுக்கு இலவச பாஸ்களை வழங்குவதில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் நாடு முழுவதும் 13.94 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர


சென்னை, ஜன. 9: ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்ய ரயில்வே ஊழியர்களுக்கு இலவச பாஸ்களை வழங்குவதில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே துறையில் நாடு முழுவதும் 13.94 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இதில் உயர் அலுவலர்களுக்கும் (ஏ, பி பிரிவு) அவர்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஆண்டுதோறும் 6 செட் (சென்று திரும்பும் வகையில்) ஏ வகுப்பு பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க மூத்த அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளி நிற பாஸ்கள் வழங்கப்படுகின்றன.
ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் 3 செட் பாஸ்கள் கிடைக்கும்.
சி, டி பிரிவு ஊழியர்களுக்கு இளம் சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட 3 வண்ணங்களில் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு ஆண்டுதோறும் 3 செட் பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பிரிவில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 25 ஆண்டுகள் பணி செய்திருந்தால் 2 செட் பாஸ் கிடைக்கும். 25 ஆண்டுகளுக்குக் குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு செட் பாஸ் உண்டு.
ஆனால், 20 ஆண்டுகளுக்குக் குறைவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரயில் பாஸ், மருத்துவ சிகிச்சை வசதி உள்ளிட்ட சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இந்த விதிகள் இனியும் மாற்றம் இல்லாமல் தொடரும்.
இந்த நிலையில், ரயில்வே துறையில் 6-வது ஊதியக் குழு அமலாகியது. இதனால், பதவி உயர்வு, தகுதி (கிரேடு) ஊதிய விகிதத்தில் உயர்வு பெற்றவர்களுக்கு பாஸ் வழங்குவதற்கான வரையறைகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
பாஸ் பறிமுதல் திட்டம் ரத்து: இதற்கிடையே, மத்திய அரசு அமைத்த, செலவு சீர்திருத்த கமிஷன் அதிரடியாக பல பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இதன்படி, இப்போதுள்ள ரயில்வே ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்றோருக்கும் இலவச ரயில் பாஸ் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் ரயில்வே துறைக்கு தேவைப்படும் மூலதனத் தொகையான ரூ.14 லட்சம் கோடியில் ஒரு பகுதியைத் திரட்டலாம் என்று அது பரிந்துரைத்தது.
இது ரயில்வே துறையில் பணியாற்றும் அனைத்துப் பிரிவினருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது. இதற்கு, ரயில்வே தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக 15.7.2010-ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு எடுக்க இருந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்த நிலையில், ரயில்வே அமைச்சகமும், ரயில்வே வாரியமும் ரயில் பாஸ் வழங்குவதில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளன. இதன் முக்கிய விவரம்:
முதலாவது ஊதியக் குழு காலத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,400 கிரேடு ஊதியத்துக்கு சமமாக ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே முதல் வகுப்பு பாஸ் என்ற நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் இப்போது ஏற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாதந்தோறும் தகுதி ஊதியம் (கிரேடு பே) ரூ.4,200 பெறுவோருக்கு ரயிலில் 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய பாஸ் அனுமதி உண்டு.
தகுதி ஊதியம் ரூ.2,800 பெறுவோர் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். தகுதி ஊதியமாக ரூ.1,800, ரூ.1,900, ரூ.2,000, ரூ.2,400 பெறுவோருக்கு ஆண்டுதோறும் குடும்பத்துடன் பயணம் செய்ய வழங்கப்படும் 3 செட் பாஸ் வழங்கப்படும். இதில் ஏதேனும் ஒரே ஒரு செட் பாஸ் மட்டுமே பயன்படுத்தி குடும்பத்துடன் ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்ய சிறப்புச் சலுகை முதல் முறையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணியில் செல்ல பாஸ்: இதே போல, ரயில்வே பணி நிமித்தமாக ரூ.1,800 தகுதி ஊதியம் பெறும் ஊழியர்களைத் தவிர, ரூ.1,900, ரூ.2,000, ரூ.2,400 பெறும் ஊழியர்களுக்கு ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்ய, பணியாற்றச் செல்லும் பயண அனுமதி (டூட்டி பாஸ்) வழங்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நிலுவையில் சில: எனினும், பாதுகாப்புத் துறை மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல விடுமுறைக்கால பயணச் சலுகை (எல்.டி.சி.) ரயில்வே ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ரயில்வே ஊழியர்களின் தாய், தந்தையரையும் தங்களுடன் அவைத்துச் செல்ல பாஸ் விதிகளில் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...