சென்னை, ஜன. 28: அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலங்கையிடமிருந்து கச்சத் தீவு மீட்கப்படும் என்று அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பழ. கருப்பையா தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, 2ஜி அலைக்கற்றை ஊழல், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பழ. கருப்பையா பேசியது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 500-க்கும் அதிகமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க முதல்வர் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தான் மீன் வளம் அதிகமாக உள்ளது. அதனால்தான் அங்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது.
கச்சத் தீவை மீட்பதற்காக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவு மீட்கப்படும் என்றார் பழ. கருப்பையா.
தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செந்தமிழன், மக்களவை உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








