புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சூடு பிடித்தது தேர்தல் பிரசாரம்: இரைச்சலுக்கு இரையாகும் 10-ம் வகுப்பு மாணவர்கள்!

சென்னை, மார்ச் 26: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தால் ஏற்படும் இரைச்சல் (ஒலி மாசு) காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகம்,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:20 am

ச. குமரன்

சென்னை, மார்ச் 26: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தால் ஏற்படும் இரைச்சல் (ஒலி மாசு) காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 தமிழகம், புதுவையில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 8.57 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். ஏற்கெனவே, கடந்த 22-ம் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களும் 10-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

 வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது.

 இதையடுத்து, மேல்நிலை வகுப்புகளில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை மாணவர்கள் பயில உள்ளனர்.

 புதிய பாடத்திட்டங்கள் குறித்து அறியாத நிலையில்,10-ம் வகுப்புத் தேர்வுகளில் அரும்பாடுபட்டு தேர்ச்சி பெறுவதன் மூலம் மட்டுமே பின்னடைவு ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பெரும்பாலான மாணவர்கள் கருதுகின்றனர்.

 இதனால், ஒருவித மன அழுத்தத்துடன் 10-ம் வகுப்பு தேர்வுகளுக்காக பாடங்களை இரவு பகலாகப் படித்து, மாணவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

 சென்னையில் நடுத்தர வகுப்பினர் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், குறைந்த வருவாய்ப் பிரிவினர் நெரிசல் மிகுந்த வாடகை வீடுகளிலும் வசிக்கின்றனர். இதுதவிர ஏழைக் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

 இந்த குடும்பங்களைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள்தான் தேர்தல் பிரசார இரைச்சலால் இப்போது அதிகம் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதுகுறித்து, பல்வேறு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டபோது, தேர்தல் பிரசாரத்தை சற்று அமைதியாக நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை கூறியது.

 இதன்பின், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை (ஏப்ரல் 13) ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், "தேர்தலை தள்ளி வைக்க முடியாது. தேர்வு மையமாக உள்ள பள்ளிக் கூடங்களுக்கு அருகே பிரசாரம் கூடாது' என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் பேரில் தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவது, "பூனைக்கு மணி கட்டும்' கதையாக உள்ளது.

 இப்போதைய நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இப்போது விடுமுறையில் தங்களது வீடுகளில் இருந்து இரவு, பகலாக படித்து, தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதனால்,இப்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பொருந்துவதாகவும் இல்லை.

  அதிகரிக்கும் இரைச்சல்: சாலைகளில் வாகனப் பெருக்கம் அதிகரிப்பு, விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் ஒலி பெருக்கிகளின் பயன்பாடு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரைச்சல் ஏற்கெனவே அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இரைச்சலின் அளவு 80 முதல் 90 டெசிபல் அளவாக உள்ளது.

 இந்நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஒலி பெருக்கிகள், வாகன போக்குவரத்து காரணமாக இரைச்சலின் அளவு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

 வானொலி, தொலைக்காட்சியில் சாதாரணமாக ஒலி அளவு 5-வது நிலையில் இருந்தால் கூட, அது 100 டெசிபல் அளவை எட்டும். இதைத் தொடர்ந்து கேட்டால் நமது செவித் திறன் பாதிக்கப்படும்.

 விதிமீறும் ஒலிபெருக்கிகள்: ஒலி பெருக்கிகளை அமைப்பதில் சிறிய, பெரிய நிறுவனங்கள் இப்போது "புற்றீசல்கள்' போல பெருகியுள்ளன. இவை, ஒலி-ஒளி அமைக்க "சம்பிரதாயமாக' போலீஸôரின் அனுமதியைப் பெற்றாலும், விதிமுறைகள் காற்றில் பறக்க விடும் நிலை உள்ளது.

 ஆனால், கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் இப்போதும் தடையை மீறி பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன.

 சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1,000 முதல் 4,000 வாட்ஸ் திறனுள்ள ஒலிபெருக்கிப் பெட்டிகள் அடுக்கடுக்காக நிலைக் கப்பிகளில் (புள்ளி) சங்கிலியில் கட்டி தொங்க விட்டு பயன்படுத்தப்படுகின்றன.

 ஏற்கெனவே கோடையின் வெம்மை, மின்வெட்டு, உலகக் கோப்பை கிரிக்கெட் என்று கவனம் சிதறி வரும் நிலையில், இப்போது தேர்தல் பிரசார இரைச்சலுக்கு மாணவர்கள் "இரையாகும்' நிலை உள்ளது.

 எனவே, பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில், விதிகளை மீறி இரைச்சலை ஏற்படுத்துவோர் மீது தேர்தல் ஆணையமும், போலீஸôரும் கவனம் செலுத்துவார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.