தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

என்ன வேண்டும் எங்களுக்கு? - போக்குவரத்துத் துறை

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கையில் அவ்வப்போது நாம் எதிர்கொள்ளும் கானல்நீர் காட்சியை பஸ் கட்டண விஷயத்திலும் போக்குவரத்துக் கழகங்கள் அரங்கேற்றிக் காட்டுவதுதான் பெரும் வேடிக்கை. இந்தக் காட்சி, அதிம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:30 am

மு.சந்திரசேகரன்

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கையில் அவ்வப்போது நாம் எதிர்கொள்ளும் கானல்நீர் காட்சியை பஸ் கட்டண விஷயத்திலும் போக்குவரத்துக் கழகங்கள் அரங்கேற்றிக் காட்டுவதுதான் பெரும் வேடிக்கை. இந்தக் காட்சி, அதிமுக அரசு,திமுக அரசு என்றில்லை. இரண்டு அரசுகளிலுமே தொடரும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது.

2001-ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 86 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பஸ் கட்டணமோ இதுவரை ஒரு முறைகூட இரு அரசுகளாலும் உயர்த்தப்படவில்லை.

"இது உண்மையா?' என்றால், இதுதான் "உண்மை'யான கானல் நீர் எனலாம். பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று சொல்லிக்கொண்டே விரைவு சேவை, டீலக்ஸ் சேவை, குளிர்சாதன பஸ் என்று வெவ்வேறு பெயர்களில் "மாற்றுப் பேருந்துகள்' இயக்குவதுபோல கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் புதிய ஏமாற்று நடைமுறையைக் கொண்டு வந்து மக்கள் மீது அரசுகள் திணித்திருக்கின்றன.

எல்லாத் தடங்களிலும் சாதாரண பஸ்களின் சேவையை மிகவும் குறைத்து, கூடுதல் கட்டண பஸ்களுமே எந்நேரமும் இயங்கும் வகையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பார்த்துக் கொண்டதைக் கண்டு கொதிக்காத பொதுமக்களே இல்லை.

அரசு இந்தப் பிரச்னையை மேலும்மேலும் மறைக்கப் பார்த்து, "மற்ற மாநிலங்களைவிட இங்குதான் கட்டணம் குறைவு. சாதாரண கட்டணப் பஸ்கள்தான் அதிகம் இயக்குகிறோம்' என்றெல்லாம் சொல்லாமல் நேர்மையான முறையில் பஸ் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

சுத்தம் என்ன விலை? சுத்தம் தொடர்பான விஷயத்தில் தனியார் பஸ்களோடு அரசு பஸ்களை ஒப்பிடவே முடியாத நிலையே இருக்கிறது.

இதற்கு முக்கியமான காரணம் இந்தப் பணிகளைக் கவனிக்கக் கூடிய ஊழியர்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான். தற்போது பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்களாகவே இருப்பதுடன் அவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்து கூடுதல் கணக்கு எழுதிக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தாற்காலிக ஊழியர்களிடம் கண்டிப்புடன் வேலை வாங்க முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள்.

விளைவு! அரசுப் பஸ்களில் ஏறுவது என்றாலே பயணிகள் அருவருப்புடன் முகம் சுளிக்கும் நிலைமை.

லாபப் பாதைக்கான வழி... போக்குவரத்துக் கழகத்தோடு விடாப்பிடியாய் ஒட்டிக் கொண்ட சொல்லாக இருக்கிறது நஷ்டம். "இந்த நஷ்டத்தைப் போக்குவதற்கு கஷ்டப்படக்கூடத் தேவையில்லை; நஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று இஷ்டப்படும் மனசு மட்டுமே போதும்' என்கிறார்கள் சில அதிகாரிகள்.

நஷ்டத்தைக் குறைப்பதற்கு அவர்கள் சொல்லும் சில யோசனைகள்: மாணவர்களுக்கு இலவச பாஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கான செலவை அரசு முழுமையாக ஈடு செய்தால் பிரச்னை ஓரளவுக்குத் தீரும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு முன் வருவதே இல்லை.

பஸ்களுக்கு பாடி கட்டுதல், பழுதான பாகங்களைச் சரி செய்து பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு போக்குவரத்துக் கழகங்களில் பொறியியல் நிறுவனங்கள் முன்பு இருந்தன. இப்போது இவையெல்லாம் வெளி நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.

முன்பு ஒரு பஸ் பாடி கட்ட ரூ.8 லட்சம் செலவானது. இப்போது ரூ.22 லட்சம் ஆகிறது. இந்தக் கூடுதல் பணம், அவ்வப்போது போக்குவரத்துக் கழக நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் நிறுவனங்களுக்கே போகிறது. இதைத் தடுத்தாலே பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

மேலும் அரசு பஸ் பணிமனைகளில் உள்ள டீசல் நிலையங்களுக்கு அளிக்கப்படும் டீசலுக்கு விற்பனை வரி விலக்கு தர வேண்டும் என்கிறார்கள் தொழிற்சங்கத்தினர். இங்கு டீசலை வெளியில் விற்பதில்லை. அரசு பஸ்களுக்கு மட்டும்தான் டீசல் தரப்படுகிறது. எனவே வரி விலக்கு தர வேண்டும் என்றும் கோருகிறார்கள்.

அரசு ஏற்க வேண்டியதும், முடிவை மாற்ற வேண்டியதுமான இந்த எளிய தீர்வுகளை மேற்கொண்டாலே நஷ்டப் பாதையிலிருந்து போக்குவரத்துக் கழகத்தை லாப பாதைக்குத் திருப்பலாமாம்.

லாபப் பாதையில் பயணிக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன.

காப்பீட்டுச் செலவு: விபத்துக் காப்பீடு தருவது போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமையாக இருக்கிறது. கர்நாடகத்தில் ரூ.20 மதிப்புக்கு மேல் உள்ள பயணச் சீட்டு கட்டணத்தில் ரூ.1 கூடுதலாக வசூலித்து தனி நிதியாக பராமரிக்கிறார்கள். அதில் இருந்து விபத்துக் காப்பீட்டு நஷ்ட ஈடுகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற ஓர் ஏற்பாட்டை தமிழக அரசும் பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

அதேபோல காப்பீட்டுப் பணம், வழக்கறிஞர்கள் போன்ற இடைப்பட்ட நபர்களின் கைகளுக்குப் போய்விடாமல், உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் போய் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் யோசனை கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் 500, 1000 புதிய பஸ்களை மொத்தமாக விழா நடத்தி வழித் தடங்களில் இயக்குவது விளம்பரத்துக்கு வேண்டுமானால் உதவலாம். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கும் பயணிகளுக்கும் என்ன லாபம்? ஒவ்வொரு பஸ் கூடு கட்டி முடித்தவுடன் வழித்தடத்தில் ஓடத் தொடங்கினால் வருவாய் கிடைக்கும். ஆனால் தொடக்க விழா நடத்த அவை காத்திருப்பதால் சில மாதங்கள் முதலீடு முடங்கி, வட்டி அதிகமாகிறது.

மேலும் ஒரே சமயத்தில் 1000 பஸ்கள் புதிதாக விட்டால், அடுத்த ஆண்டு அதே மாதத்தில் அவ்வளவு பஸ்களும் தருதிச் சான்று (எப்.சி.) பெறும் நிலைக்கு வரும். எனவே பெயிண்ட் மட்டும் அடித்து, போக்குவரத்து அதிகாரிகளை "கவனித்து' சான்றிதழ் வாங்குகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பழுதை நீக்காமல் இவ்வாறு சான்றிதழ் பெற்றுவிடுவதால், வழித்தடத்தில் ஓடும்போது இடையில் அவை நின்று போகின்றன. எனவே மாதம் 50 அல்லது 100 என புதிய பஸ் விட்டால் எப்.சி. வரும்போது அனைத்திலும் பழுதை சரி செய்ய முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆம்னி "கொள்ளை': மக்களுக்கு அடுத்த பிரச்னையாக இருப்பது ஆம்னி பஸ் கட்டணம். "கொள்ளை' அடிக்கிறார்கள் என்று திட்டினாலும் வேறு வழி இன்றி அந்தப் பஸ்களில்தான் நீண்டதூர பயணங்களை பல சமயங்களில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் அறிவிக்கிறார்களே தவிர, இதுவரை எந்த உரிமமும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இதை முறைப்படுத்தினால் மக்களின் நல்லெண்ணத்தை புதிய அரசால் எளிதாகப் பெற முடியும்.

கிராமங்களின் பஸ் வசதிக்காக மினி பஸ் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மினி பஸ் உரிமையாளர்கள் வருமானத்துக்காக, நகரங்களில் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எனவே அரசே மினி பஸ் சேவைகளையும் இயக்க பரிசீலிக்க வேண்டும் என்று கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழிலாளர்கள் பிரச்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களைப் பொருத்தவரை உடனுக்குடன் பழுதுநீக்கிட ஏற்பாடு செய்யாதது, குறைந்த செலவிலான உதிரிப் பாகங்களை டிரைவர்களே மாற்றும்படி செய்துவிட்டு அதிகாரிகள் அதற்கு கணக்கு எழுதிக் கொள்வது, நெரிசல் காரணமாக பயணம் தாமதமானாலும் குறிப்பிட்ட நடை அளவுக்கு (சிங்கிள்) ஓட்டியாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது போன்ற பிரச்னைகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழலை மிகவும் பாதிக்கும் விஷயமும், போக்குவரத்து நெரிசலால் தேவையற்ற டீசல், பெட்ரோல் விரயமும், அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கின்றன. அரசு துறையில், நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வசதி குறைந்த செலவில் போதுமான அளவு கொடுக்கப்படுமேயானால், தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதுடன் மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

இதனால் ஏற்படும் இழப்பு, எரிவாயு சிக்கனம், சுகாதாரம், அதிகரித்த பயண வசதியால் ஏற்படும் உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றால் ஈடுகட்டப்படும்.

அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போகும் நமது அதிகாரிகளுக்கும், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது நன்றாகத் தெரிந்திருந்தும், தங்கள் சுயநல ஆதாயத்திற்காகப் போக்குவரத்துத் துறையினைத் தரம் வாயந்ததாகவும், திறமையானதாகவும் மாற்றத் தயங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

"போக்கும்' - "வரத்தும்' கொண்டதே போக்குவரத்து. போகும் பாதையில் மேடுமிருக்கும்; பள்ளமுமிருக்கும். இதைச் சரிசெய்ய வேண்டிய கடமை போக்குவரத்துக் கழகத்திற்கும் அரசுக்கும் இருக்கிறது. கறுத்து நீளும் சாலைகளில் இரவுகளில் ஒளியை உமிழ்ந்தவாறே நிற்கும் சோடியம் விளக்குகளைப்போன்று திடமான முடிவுகளுடன் கூடிய திட்டங்களே போக்குவரத்துக் கழகத்தைக் காப்பாற்றும் என்பதை அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசாவது புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.