நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பறந்தது பட்டம் மட்டுமல்ல, மனதும்!

குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரையும் மகிழ்விக்கும் விளையாட்டு என்று எதையாவது சொல்வோமென்றால் அது பட்டம் விடுவதாகத்தான் இருக்கும். வானில் பட்டத்தைப் பறக்கவிட்டுவிட்டு, அதன் நூலைக் கையில் பிடித்தவாறு முன்ன

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:23 pm

வே.சுந்தரேஸ்வரன்

குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரையும் மகிழ்விக்கும் விளையாட்டு என்று எதையாவது சொல்வோமென்றால் அது பட்டம் விடுவதாகத்தான் இருக்கும்.

வானில் பட்டத்தைப் பறக்கவிட்டுவிட்டு, அதன் நூலைக் கையில் பிடித்தவாறு முன்னும், பின்னும் நூலை ஆட்டும்போது வானில் பறப்பது பட்டம் மட்டுமல்ல, நமது மனமும்தான்.

2,800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள்தாம் முதலில் பட்டம் விட்டார்களாம். இன்றோ உலகம் முழுவதும் பட்டம் விடுவது, ஒரு மனதுக்கினிய விளையாட்டாக மாறிவிட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் பட்டம் விடும்விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறார்கள்.

தலைநகர் தில்லியில் முதல் முறையாக இந்த ஆண்டு இரு நாள் விழாவாக சனிக்கிழமை பட்டம் விடும் விழா தொடங்கியது.

தில்லி இந்தியா கேட் பகுதி வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தில்லி,பஞ்சாப், தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம், சண்டீகர் போன்ற பல மாநிலங்களிலிருந்து பட்டம் விட மக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

விதவிதமான வடிவங்களில், விதவிதமான வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களை குழந்தைகளும், பெரியவர்களும் வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். அப்பகுதியின் வானமெங்கும் வண்ண, வண்ணப் பட்டங்களின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பட்டம் அறுக்கும் போட்டி

எதில்தான் போட்டியில்லை? வானில் பறந்து செல்லும் பட்டங்கள் ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டு நூலால் அறுக்கச் செய்யும் போட்டியும் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் பலரும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

விளையாட்டிலும்

விழிப்புணர்வு

சமூக அக்கறையுள்ள மனிதர்கள் எங்கே போனாலும் சும்மா இருக்கமாட்டார்கள் போலும். மழை, வெள்ளம், இயற்கை, நோய் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பட்டங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வைத்தவர்: சண்டீகரைச் சேர்ந்த தடய அறிவியல் விஞ்ஞானி டாக்டர் தேவீந்தர் பால் சிங் ஷேகல்.

""பட்டம் விடுவது ஏதோ பொழுதுபோக்கு விஷயம் மட்டுமே அல்ல. பட்டம் பறக்க விடும்போது மனம் ஒருமுகப்படுகிறது. நினைவுத் திறன் அதிகரிக்கிறது. குழந்தைகளிடம் ஆர்வம் பெருகுகிறது. திறந்த வெளியில் இந்த விளையாட்டில் ஈடுபடும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி கிடைக்கிறது. ஆகவே, பட்டம் விடுவதற்கு குழந்தைகளைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

பட்டம் விடுவதை வெறும் விளையாட்டாக மட்டும் கருதாமல் அதிலும் சமூக அக்கறை வேண்டும் என்பதற்காக சுற்றுச்சூழல், இயற்கைப் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை பட்டத்தில் எழுதி தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது இலவசமாக வழங்கி வருகிறேன். இதற்காக எனது ஊதியத்தில் இருந்து மாதம் ரூ.2 ஆயிரம் செலவழிக்கிறேன்'' என்கிறார் தேவீந்தர் பால் சிங் ஷேகல்.

இவருடன் மகன் கன்வால் பிரீத் சிங், எம்.எம். தாதாவும் வந்திருந்தது இன்னொரு சுவாரஸ்யம்.

இங்கே வந்திருந்த பாடலாசிரியர் சாக்ஷாத் பாசின், ""பட்டம் பறக்க விடுவதை மன மகிழ்ச்சி, தேசப் பற்று, மத நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு விளையாட்டாகவே பார்க்கிறேன். அதனால்தான், இந்தியாவில் எங்கெல்லாம் இந்த விழா நடைபெறுகிறதோ அங்கெல்லாம் சென்றுவிடுவேன்'' என்கிறார் உற்சாகமாக.

""நான் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுடன் பட்டம் விளையாடுவேன். இதனால், மனதுக்கு மகிழ்ச்சி. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் இந்த விழாவுக்கு எனது மகள் அன்னபூரணியையும் அழைத்து வந்திருக்கிறேன். பட்டம் விடும் இந்த விழாவை நிறையப் புகைப்படங்களை எடுத்து இதைப் பார்க்க முடியாத- வெளியூர்களில் இருக்கும்- எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பப் போகிறேன். தமிழ்நாட்டில் கூட இதுபோன்று பட்டம் விடும் விழாவை நடத்தினால் எவ்வளவோ நன்றாக இருக்கும்'' என்கிறார் தில்லி ஆர்.கே. புரத்தில் வசிக்கும் தமிழரான கே.சி. பாலசுப்பிரமணியன்.

பட்டங்களின் கண்காட்சி அரங்கில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தார் சுந்தரமூர்த்தி.

""8 ஆண்டுகளாக இதுபோன்ற பட்டம் பறக்க விடும் திருவிழாக்களில் பங்கேற்று வருகிறேன். குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் என பல மாநிலங்களில் நடைபெறும் பட்டத் திருவிழாவில் மட்டுமல்ல, இலங்கையில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில்கூட பங்கேற்றிருக்கிறேன். பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.

உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும் இந்தப் பட்டம் விடும் விளையாட்டை ஏன் தமிழகத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்கிறார் வருத்தத்துடன்.

""அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தில் கூட பட்டம் பறக்க விடும் விழாவை நடத்தும்போது, தமிழக அரசு இதற்கு ஏன் அனுமதியளிக்கவில்லை'' என்கிறார் ஆதங்கத்துடன்.

தில்லி சுற்றுலாத் துறையினர், ஷாஜஹானாபாத் மறுமேம்பாட்டு நிறுவனம், கலை மற்றும் கலாசாரத் துறையுடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

இவ்விழாவில் தில்லி சுற்றுலாத் துறைத் தலைவர் மணீஷ் சத்ராத், மேலாண்மை இயக்குநர் ஜி.ஜி. சாக்úஸனா, தில்லி சுற்றுலா மக்கள் தொடர்பு மேலாளர் சுதிர் சோப்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டம் விடும் திருவிழா இன்றும் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை வரை பட்டம் விடும் நிகழ்ச்சியும், இரவில் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அது சரி, விழா எப்படி தொடங்கியது என்கிறீர்கள்? வேறு எப்படி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஒரு பட்டத்தைப் பறக்கவிட்டுத்தான் இந்த விழாவைத் தொடங்கிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.