தமிழகத்தில் தபால்கள் கடும் தேக்கம்
சிதம்பரம், ஏப். 6: தமிழகத்தில் பெரும்பாலான ஆர்.எம்.எஸ். (ரயில்வே மெயில் சர்வீஸ்) தபால் பிரிப்பு அலுவலகங்களில் கடும் தபால் தேக்கம் ஏற்பட்டு வருவதாகவும், அதனால், கடிதப் போக்குவரத்து தாமதமாவதாகவும் பொதும


சிதம்பரம், ஏப். 6: தமிழகத்தில் பெரும்பாலான ஆர்.எம்.எஸ். (ரயில்வே மெயில் சர்வீஸ்) தபால் பிரிப்பு அலுவலகங்களில் கடும் தபால் தேக்கம் ஏற்பட்டு வருவதாகவும், அதனால், கடிதப் போக்குவரத்து தாமதமாவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, திருச்சி கோட்ட தபால் துறையில் சமீபகாலமாக அனைத்து தபால்களையும் 2 ஆர்.எம்.எஸ். அலுவலகங்களுக்கு அனுப்பி அங்கு பிரிக்கப்பட்டு உரிய பகுதிகளுக்கு அனுப்பப்படும் புதிய முறையால் தபால்கள் பெரிதும் தேக்கமடைகின்றன.
தமிழகத்தில் முன்னதாக ஆர்.எம்.எஸ். தபால் நிலையங்களில் அங்கேயே தபால்கள் பிரித்து உடனுக்குடன் அனுப்பப்பட்டு வந்தன. இதனால் குறிப்பிட்ட காலத்தில் தபால்கள் தேக்கமின்றி அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது திருச்சி கோட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதிமுதல் அனைத்து தபால்களும் விழுப்புரம், திருச்சி ஆகிய 2 தபால் பிரிப்பு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பிரிக்கப்படுகின்றன. சிதம்பரம் வரை விழுப்புரம் ஆர்.எம்.எஸ். அலுவலகத்திலும், கரூர், புதுக்கோட்டை வரை திருச்சி ஆர்.எம்.எஸ். அலுவலகத்திலும் தபால்கள் பிரிக்கப்படுகின்றன.
இப் புதிய திட்டத்தின் கீழ் அந்தந்த ஆர்.எம்.எஸ். அலுவலகங்களில் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்த அனைத்து தபால்களும் தற்போது விழுப்புரம் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதால் தபால்கள் தேங்கி மிகவும் தாமதமாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஆர்.எம்.எஸ். தபால் நிலையம் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறைக்கு செல்லவேண்டிய தபால்கள் கூட விழுப்புரம் ஆர்.எம்.எஸ்-க்கு விருத்தாசலம் வழியாக அனுப்பப்பட்டு அங்கிருந்து பிரிக்கப்பட்டு அனுப்பப்படுவதால் 250 கி.மீ.க்கு மேல் அந்த தபால்கள் சுற்றி உரியவர்களுக்கு சென்றடைய சில நாளாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விரைவுத் தபால்கள் முழுவதும் விருத்தாசலம், விழுப்புரம் தபால் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பிரித்து அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தியதால் அந்த தபால்களும் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. இந்திய தபால் துறையை அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கன்சி என்ற நிறுவனம் வாங்க முயற்சி செய்வதாக தபால் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பதிவுத் தபால், சாதாரணத் தபால் என்ற பெயரில் மத்திய அரசு இந்தியா முழுவதும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றி, பிடிவாதத்தை தளர்த்தி பழைய முறைப்படி தபால் பிரிப்புகளை செய்து தபால் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...