கோடை விடுமுறைக்கு பிச்சாவரம் வாங்க...
சிதம்பரம், ஏப். 15: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. விடுமுறையைக் கழிக்க கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்


சிதம்பரம், ஏப். 15: பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. விடுமுறையைக் கழிக்க கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் மற்றும் எம்.ஜி.ஆர். திட்டு என்கிற தீவை படகில் சென்று சுற்றிப் பார்த்து மகிழலாம்.
சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச் சாலை வழியாக வந்து பாதியில் பிரியும் கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்துக்குச் செல்லலாம்.
பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணைக் காடுகளும் எல்லைகளாக உள்ளன.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்றுப் பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். ÷மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.
2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின் போது, மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது. தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னூ முயற்சியில் எம்.ஜி.ஆர். திட்டு தீவில், இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சூரியஉதய நிகழ்ச்சியுடன் விடியல்விழாவை நடத்தினார்.
இவ்விழாவை, 2004-ம் ஆண்டு முதல்முதலாக சிதம்பரம் உதவிஆட்சியராக இருந்த போது அவர் தொடங்கினார். அதன் பிறகு ராஜேந்திரரத்னூ முதல்முறையாக கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற போது 2008-ம் ஆண்டு விடியல் விழா நடத்தப்பட்டது.
மருத்துவ குணம் கொண்ட தில்லைமரம்: பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ÷தில்லை மரம் மருத்துவக் குணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும்.
தனது தொழுநோய் குணமடைய வேண்டி முதலாம் பராந்தக சோழன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி 45 நாள்கள் முனிவர் ஒருவரிடம் தில்லை மூலிகைத் தாவரத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று அந்நோய் குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது. ÷மேலும் சுரபுண்ணைச் செடி புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
படகுசவாரி: பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக் குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியைப் பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
படகுக் குழாமில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம் துடுப்புப் படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200 கட்டணமும், மோட்டார் படகில் இரண்டு மணி நேரத்துக்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.2100 வசூலிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுசவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் உதயகுமார் தொலைபேசி எண்: 04144-249249.÷
சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739, கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227. வெப்சைட் முகவரி: www.killai.com.
தங்கும் விடுதி மற்றும் உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனம், உணவகம் மற்றும் பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறந்துள்ளது.
மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கி சுற்றிப் பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார்.
பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...