நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடும் மின்வெட்டு, நீர்ப் பற்றாக்குறை: கேள்விக்குறியான விவசாயம்

சிதம்பரம், ஏப். 29: கடும் மின்வெட்டு, வேளாண் பாசனத்துக்கு போதிய நீர் இல்லாததால் கடலூர் மாவட்டம் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் மேற்கொள்ளவுள்ள குறு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:55 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஏப். 29: கடும் மின்வெட்டு, வேளாண் பாசனத்துக்கு போதிய நீர் இல்லாததால் கடலூர் மாவட்டம் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் மேற்கொள்ளவுள்ள குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் மொத்தம் 1 லட்சத்து 1910 ஏக்கர் நிலங்களில் வேளாண் பாசனம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள்கள் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு இருந்தும் இந்த ஆண்டாவது லாபத்தை சம்பாதிக்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆண்டு புயலால் நெற்பயிர்கள் படுத்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் நகைகளை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் பெற்றும் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெருத்த நஷ்மடைந்தனர். அரசு அளித்த நிவாரணமும் போதுமானது இல்லை. அந்த நிவாரணத் தொகையும் முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை என்பது விவசாயிகளை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து உழவர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு புயல் பாதித்து 5 மாதங்களாகியும் விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இப்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியில் சென்னைக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் 42.35 அடி (மொத்தக் கொள்ளளவும் 47.50) நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலும் குறைந்த அளவில்தான் நீர் உள்ளது. கோடை காலம் நெருங்கிவிட்டதால் நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இப்போது விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி முடிவுற்று, குறுவை சாகுபடி விதை விடும் நேரமாகும். ஆனால் விதைவிடுவதற்கு நீர் கிடையாது. ஏரியில் குறைவாக நீர் உள்ளதால் திறந்துவிட வாய்ப்பு இல்லை. காவிரி டெல்டா கடைமடை பகுதியில் 2004-ம் ஆண்டு சுமார் 32 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

அவை படிப்படியாகக் குறைந்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெறும் 7500 ஏக்கரில்தான் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. வரும் ஆண்டு நீர்ஆதாரம், மின்சாரம் ஆகியவற்றை பொருத்துதான் விவசாயிகள் குறுவை சாகுபடியில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் விவசாயிகள் சம்பா, நவரை பட்டம், குறுவை என மூன்று போகம் சாகுபடி செய்து வந்தனர்.

அதன் பிறகு ஆள்பற்றாக்குறை, நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் சம்பா மற்றும் குறுவை ஆகிய இருபோக சாகுபடியாக மேற்கொண்டனர். தற்போது குறுவை சாகுபடி போய் சம்பா சாகுபடி மட்டும்தான் செய்யும் நிலை உருவாகியுள்ளது. கடும் மின்வெட்டு, நீர் பற்றாக்குறை, நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேட்டூர் அணையில் ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். 1934-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 77 வருடங்கள் வேளாண் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதில் 16 முறைதான் ஜூன் 12-ம் தேதி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளில் நீர்ப்பிடிப்பு குறைவாக இருந்த காரணத்தால் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதான் முதன்முறையாக முன்கூட்டியே ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகள் முன்கூட்டியே நீர் திறந்தாலும், மழைநீரை எதிர்பார்த்து விவசாயம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு பிறகு உளுந்து பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து போதிய வருமானம் ஈட்டி வந்தனர்.

விவசாயிகளுக்கு முழுமையான வருவாயே குறுவை சாகுபடிதான். சம்பா சாகுபடி தொடர்மழை, வெள்ளம் ஆகியவற்றில் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு உறுதியை ஏற்படுத்த தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முன்வர வேண்டும். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு தற்போது 20 கிலோ விலையில்லா விதைநெல் மற்றும் வேளாண் இடுபொருள்கள் அரசு வழங்கியுள்ளது. எனவே அரசு வழங்கிய விலையில்லா விலைநெல்லை கொண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.