சென்னை, ஆக. 21: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மொத்த மின்சாரத்தில் சுமார் 1,000 மெகா வாட் அளவு வரை பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே, காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சம் 1000 மெகா வாட் அளவிலிருந்து குறையுமானால், மின் வெட்டு அளவை அதிகரிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 10,464 மெகா வாட் என்ற அளவில் உள்ளது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் புனல், அனல், வாயு மின் உற்பத்தி நிலையங்கள் 5,804 மெகா வாட் நிறுவு திறனைக் கொண்டுள்ளன. இதுதவிர மத்திய தொகுப்பிலிருந்து 2,481 மெகா வாட், தனியார் உற்பத்தி நிலையங்களிலிருந்து 1180 மெகா வாட், இதர இனங்கள் மற்றும் வெளிப்புற உதவி திட்டங்கள் மூலம் என மொத்தம் 10,464 மெகா வாட் நிறுவு திறனை தமிழகம் கொண்டுள்ளது.
ஆனால், மின் நிலையங்களில் பழுது, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மொத்த நிறுவு திறனில் 7000 மெகா வாட் அளவுக்கும் குறைவான மின்சாரமே தமிழகத்துக்கு கிடைக்கின்றது.
மத்திய தொகுப்பிலிருந்து...: மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய பங்காக 2,481 மெகா வாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் ஆனால், இப்போது 1,539 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது. இதனால், 942 மெகா வாட் பற்றாக்குறையாக உள்ளது.
ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் 2,088 மெகா வாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கான பங்கு 659 மெகா வாட். ஆனால், பராமரிப்புப் பணி காரணமாக அங்கிருந்து தமிழகத்துக்கு 510 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
நெய்வேலி மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 700 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும்.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு, பராமரிப்பு பணி காரணமாக 492 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது.
கல்பாக்கம் மெட்ராஸ் அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 330 மெகா வாட் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அங்கு பல்வேறு காரணங்களால் உற்பத்தி 330 மெகா வாட் அளவுக்கு குறைந்ததால், 75 சதவீத பங்கு என்ற அளவில் தமிழகத்துக்கு 230 மெகாவாட் அளவு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 19) கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் உள்ள 2 டிரான்ஸ்ஃபார்மர்களிலும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு கிடைத்து வந்த 230 மெகா வாட் தடைபட்டுள்ளது.
இதுபோல் ஒடிசா மாநிலம் தால்ட்சர் அனல் மின் நிலையத்தில் (நிலை 2) மொத்த நிறுவு திறனான 2,000 மெகா வாட் அளவிலிருந்து தமிழகத்துக்கு 501 மெகா வாட் அளவு கிடைக்க வேண்டும். ஆனால், அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு மொத்த நிறுவு திறனில் 1,019 மெகா அளவு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்துக்கு இப்போது 277 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
கர்நாடகம் மாநிலம் கைகா அணு மின் நிலையம் 1 மற்றும் 2-லிருந்து மொத்த நிறுவு திறனான 880 மெகா வாட் அளவில் தமிழகத்தின் பங்காக 196 மெகா வாட் அளிக்கப்பட வேண்டும். ஆனால், அங்கிருந்து இப்போது 150 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது.
ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாத்ரி அனல் நிலையத்திலிருந்து தமிழகத்தின் பங்காக கிடைக்க வேண்டிய 110 மெகா வாட் அளவில் இப்போது 95 மெகா வாட் மின்சாரம் கிடைக்கின்றது.
எனவே, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்தின் பங்காக கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 942 மெகா வாட் அளவு பற்றாக்குறையாக கிடைக்கின்றது.
இதுபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தியும் இப்போது குறைந்துள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் (210 மெகா வாட்) பராமரிப்புப் பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் 5000 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை நிலவி வரும்போதும், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்திருப்பதன் காரணாக நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியது: காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி திங்கள்கிழமை 3,037 மெகா வாட் என்ற அளவிலும், செவ்வாய்க்கிழமை 3,100 என்ற அளவிலும் இருந்தது.
அதே நேரம், சோதனை மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலையத்திலிருந்து 218 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இவற்றின் மூலமே நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி 1,000 மெகா வாட் அளவை விடக் குறையுமானால், மின் வெட்டு அளவை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
புதிய திட்டங்களில் உற்பத்தி தொடங்கினால் மட்டுமே நிலைமை சீரடையும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


