தெய்வீகத்தை உணர்த்தும் நாட்டியாஞ்சலி
நாட்டியாஞ்சலி என்ற சொல் இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள பாரத நாட்டு பாரம்பரிய ஆடல் கலைஞர்களுக்கு பரவச உணர்வை ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. திருச்சிற்றம்பலம்-தில்லை-சிதம்பரம் எனப் பல்வேறு பெயர்களால் கு


நாட்டியாஞ்சலி என்ற சொல் இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள பாரத நாட்டு பாரம்பரிய ஆடல் கலைஞர்களுக்கு பரவச உணர்வை ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. திருச்சிற்றம்பலம்-தில்லை-சிதம்பரம் எனப் பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆலயத்தில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளில் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி எனப்படும் ஆடல் பெருவிழாவே இதற்கு காரணம்.
சைவ சமயம் சார்ந்தவர்களுக்கு கோயில் என்றாலே சிதம்பரம் என்றே பொருள். 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழைமையான சைவ வழிபாட்டுத் தலமான இந்த ஊரின் பெருமைக்கு அளவே இல்லை. அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் மற்றும் எண்ணற்ற நாயன்மார்களும், வள்ளலாரும் மற்றும் பலராலும் பாடப் பெற்ற பெருமை உடையவன் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான்.
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளும் தமிழுலகிற்கு கிடைக்க பெற்றமைக்கு சிதம்பரமே காரணம். அதனாலேயே எந்த ஊரில் திருமுறை ஓதினாலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லையே தொடங்குவர்.
சிதம்பரம் ஸ்தலத்தின் பெருமையினால் காலங்கள் தோறும் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் 10-ம் நூற்றாண்டு தொடங்கி 16-ம் நூற்றாண்டு வரை செய்த பல்வேறு திருப்பணிகளால் வானளாவிய கோபுரங்களுடன் கூடிய பெரிய கற்கோயிலாக உருவெடுத்தது. பின்னர் நாட்டுக் கோட்டை நகரத்தார்களும், யாழ்ப்பாண தமிழர்களும், சிதம்பரம் பகுதியைச் சார்ந்த வேளாளர்களும், தொடர்ந்து கொடுத்து வந்த கொடைகளால் என்று மாறாத வழிபாட்டு ஸ்தலமாக உயிர்போடு இயங்கும் திருக்கோயிலாக நடராஜர் கோயில் உள்ளது. கோயிலிலின் பெருமையே, அறிவுக் கோயிலாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இம்மண்ணில் அமையக் காரணமாயிற்று.
ஆன்மிகக் கோயிலாக மட்டுமின்றி ஆடல் கலையின் இலக்கணத்தை (108 கரணங்கள்) சிற்பமாக வடித்தும் அழியாத கலைக் கோயிலாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழும், இசையும், கலையும் உயிராய் கலந்த இம்மண் தமிழர்களின் பண்பாட்டு சிகரமாய் விளங்கும் ஆடல் கலையின் தெய்வீகத் தன்மையை மீண்டும் உணர்த்த எழுந்த ஒரு முயற்சியே நாட்டியாஞ்சலி பெருவிழா.
இசையும், ஆடலும் இறைவனுக்கே அர்ப்பணிக்கத்தக்கது என்ற உணர்வோடு கோயில் வழிபாட்டிலும், விழாக்களிலும் நிகழ்த்தப் பெற்ற பண்பாடு தமிழர்களுடையது. அப்போது அதனை நுகரும் மக்களும் இறை உணர்வாக ஒன்றியிருக்கும் அனுபவத்தை பெறுவர். மேலை நாடுகளில் இசையும், ஆடலும் புலன் இன்பத்துக்கு என்றே ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் தமிழர் பண்பாட்டில் இறை உணர்வை மையமாக வைத்து அவை உருவாக்கப்பட்டன. நாள்தோறும் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் நிகழ்த்தப் பெரும் 16 வகை உபசாரங்களில் கீதம், வாத்தியம், நிருத்தம் என இசையும், பாடலும், ஆடலும்
இடம் பெறும்.
பண்பாட்டு கலை விழாவாக. . .
தெய்வீக உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக இசையும், பாடலும், ஆடலும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு ஆலயங்களிலே படைக்கப் பெற்றது. அதன் வழி மக்களை அடைந்த ஆடல்கலை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு அரசியல், சமூக மாற்றங்களினால், சட்ட நெருக்கடிகளால் ஆலயங்களை விட்டு வெளியேறி பெருநகரங்களிலே அரங்குகளிலே ஆடப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பக்கம் ஆடல்கலை பயிலுவதற்கு முற்காலத்தில் இருந்த கட்டுப்பாடு எல்லைகளை கடந்து பலரும் அதை பயில முன் வந்தனர்.
இந்த மாற்றத்தை நெறிபடுத்த வேண்டும் என்ற உணர்வோடு அறிஞர்களான டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கினர். இன்றைக்கு பாரத நாட்டின் அனைத்து வகை ஆடல் கலைஞர்களும், பரதநாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஓடிஸி, சத்ரியா, மணிப்புரி. கதகளி, யட்சகானம், ச்சாவ் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடல்வல்லான் திருவடியில் அஞ்சலி செலுத்தும் மாபெரும் பண்பாட்டு கலை விழாவாக உருவெடுத்துள்ளது.
விழா ஏற்பாடுகள். . .
20-ம் தேதிமுதல் 24-ம் தேதி வரை 5 நாள் நடைபெறவுள்ள நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுவினர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், கே.சுவாமிநாதன், வி.எஸ்.ராமலிங்கம், டாக்டர் ஆர்.நாகசாமி, வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.ராமநாதன், ஆர்.கே.கணபதி, வி.பாலதண்டாயுதம், டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.சபாநாயகம் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
நாட்டியாஞ்சலியில் இன்று....
நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவில் திங்கள்கிழமை (பிப்.20) பங்கேற்கும் நடனக்கலைஞர்கள் விவரம்:
(திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.20 வரை): பெங்களூர் கிருத்திகா. சேலம் நிருத்ய கலாலயா ஆகியோரின் பரதம், கோவை ஸ்ரீஅபிராமி நாட்டியாலயா மாணவிகளின் நாட்டிய நாடகம், சிதம்பரம் மங்களலட்சுமி-மானச சரஸ்வதி, அண்ணாமலைப் பல்கலை. கவின் கலைத்துறை மாணவர்கள், சென்னை அனுஷா வெங்கட்ராமன், சௌமியா பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பரதநிகழ்ச்சி.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளுக்கு பின்னர், வள்ளி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த பெங்களூரை சேர்ந்த பிரசாந்த் சாஸ்திரி (சஞ்சய்), சுனிதா பிரசாந்த் ஆகியோரின் பரதம், புதுதில்லி ஜெயந்த் கஸ்த்வார் குழுவினரின் கதக் நடனம், பெங்களூர் சித்ரா அரவிந்த் பரதம், சென்னை வே.ராகவன் நிகழ்கலைகள் மையம் நந்தினி ரமணி இயக்கத்தில் வழங்கும் நாட்டிய சமாராதனம் நிகழ்ச்சி, சி.வி.சந்திரசேகரின் சிவஅஷ்டபதி நடனம், திருவனந்தபுரம் டாக்டர் நீனா பிரசாத் மற்றும் அவரது மாணவிகளின் மோகினி ஆட்டம்.சென்னை நர்த்தகி நட்ராஜின் தேவாரம் நாட்டியம், சென்னை சிவகலாயம் மாணவிகளின் சிவலீலா நாட்டிய நாடகம், யு.எஸ்.ஏ கிருபாபாஸ்கரன், காயத்ரி வைத்தியநாதன், மகராஷ்டிரா தானே அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள், சென்னை ஓம் நிருத்யஷேத்ரா, சென்னை நர்த்தனாலயா நாட்டியப்பள்ளி, ஸ்ரீரங்கம் பரத கலா அகாதெமி மாணவிகள், யுஎஸ்ஏ கலைசந்திரசேகரன், சென்னை எம்.பெருமாள் ஆகியோரின் பரதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...