நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை தேவை
ஆலங்குடி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், குளம், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்


ஆலங்குடி: தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், குளம், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் அதிகமான விளை நிலங்களை உள்ளடக்கிய மாவட்டங்கள், ஆற்றுப் பாசன வசதி இல்லாதவைகளாக உள்ளன. அந்தப் பகுதிகளில் முக்கியத் தொழிலாக உள்ள விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை மழை மூலமாகவும், ஆழ்குழாய்க் கிணறு மூலமாகவும் மட்டுமே பெற முடியும்.
ஆழ்குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் பெறும்போது, குறிப்பிட்ட ஆழத்தில் தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லை. ஆனால், தற்போது இந்தப் பகுதிகளில் மழை நீர் முறையாகச் சேமிக்கப்படாததாலும், குளம், கால்வாய் போன்றவை முறையாகப் பராமரிக்கப்படாததாலும் நிலத்தடி நீர் அதிகரிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இதனால், இந்தப் பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு மூலம் சாகுபடி செய்வது மிகவும் சிரமமான விஷயமாகும்.
உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வித அணைகளும் இல்லை. ஆனால், இந்த மாவட்டம் விவசாயத்துக்கு பிரசித்தி பெற்றதாகும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் ஒருங்கே விளையும் பகுதியாக இந்த மாவட்டம் திகழ்கிறது. இது புதுகைக்கு கிடைத்த பெருமைக்குரிய விஷயம். அதேசமயம், இங்கு நீராதாரத்துக்காக விவசாயிகள் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான செயல் என்னவென்று பார்க்கும்போது, விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை உணர முடிகிறது.
இந்த மாவட்டத்தில் ஏறத்தாழ 5 ஆயிரத்து 400 குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் மழைக் காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, அவர்கள் விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு ஏற்றவாறு குளங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
மன்னர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் அரசு ஆவணங்களில் உள்ளது போல, நீர்த்தேக்க நிலைகளும், கால்வாய்களும் இருந்தன. ஆனால், இன்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த இடங்களில் குளம் இருப்பதில்லை. மாறாக, குளத்தின் பெயரில் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறாக, குளங்களையும், வரத்து வாரிகளையும் சமன்படுத்தி, வீட்டு மனைகளாக மாற்றும் அவல நிலை பெரு நகங்களில் தொடங்கி, கடைக்கோடி கிராமங்கள் வரை நீடிக்கிறது.
இதுபோன்ற செயல்களால் பல இடங்களில் குளங்களும், கால்வாய்களும் காணாமலே போய்விட்டன. இதனால், மழை நீரைத் தேக்கிவைத்து, நிலத்தடி நீரை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதன் விளைவாக, நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குச் சென்று, பாசனத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதில்லை. இந்த நிலை நீடித்தால், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும். மேலும், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேற்பனைக்காடு கிராமம் டெல்டா பகுதிகளில் ஒன்று. இங்கு நிலவும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, அந்த ஊராட்சி நிர்வாகம் குடிநீரை லாரி மூலம் விநியோகிக்கிறது. மாவட்டத்திலேயே கிராமப் பகுதியில் இங்குதான் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனை கிராமத்தின் வளர்ச்சி என்று கருதுவதைவிட, எந்த அளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.
அதேபோல, ஆலங்குடி அருகே சேந்தன்குடி கிராமத்தில் அம்புலி ஆற்றின் கீழ், ஏறத்தாழ 3 கி.மீ. சுற்றளவு கொண்ட பெரியாத்தாள் ஊருணியைச் சீரமைக்கும் பணி கடந்த 2008-2009-ல் ரூ. 18.79 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நிகழாண்டு பலத்த மழை பெய்தும், இந்த ஊருணி வறண்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம், இங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் முறையாக இல்லை என்பதே. இதன் காரணமாக, மழை நீர் கடலுக்குள் சென்று வீணாகிறது. ஏராளமான குளங்களின் நிலையும் இதுதான்.
தண்ணீருக்கான உரிமையைப் பெற தமிழக மக்கள் அண்டை மாநிலங்களிடம் போராட வேண்டியுள்ளது.
எனவே, கடலுக்குள் சென்று வீணாகும் மழை நீரைத் தேக்கி வைக்க இங்கு குறு அணைகளாகத் திகழும் குளங்களையும், ஆறாகத் திகழும் கால்வாய்களையும் மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...