மேல்நிலைக் கல்வி பெற 12 கி.மீ. செல்லும் மாணவர்கள்!

தருமபுரி: மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாததால், 12 கி.மீ. தொலைவு சென்று கல்வியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சிட்லிங் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்.  தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உ
மேல்நிலைக் கல்வி பெற 12 கி.மீ. செல்லும் மாணவர்கள்!
Updated on
2 min read

தருமபுரி: மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாததால், 12 கி.மீ. தொலைவு சென்று கல்வியைத் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சிட்லிங் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்.

 தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள மலைப் பகுதியான சிட்லிங் ஊராட்சியில் 24-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சிட்லிங், வேலனூர் மற்றும் எஸ்.தாதம்பட்டி ஆகிய மூன்று மலைக் கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

 இந்தப் பள்ளிகளில் சிட்லிங், முலசிட்லிங், நம்மங்காடு, வேலனூர், தென்நகர், நாய்குத்தி, வலத்தாம்பட்டி கோம்பை, பாலகுட்டை, ரெட்ட குட்டை, காளியான் கொட்டாய், மலைதாங்கி, ஏ.கே.தண்டா, மேல்தண்டா, பெத்தேல் தண்டா, முள்ளிக்காடு, கோவில்காடு, பொருசு மரத்து வளைவு, கோம்பை, புதுவளைவு, எஸ்.தாதம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம்.

 இந்த உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை, அரூர், தருமபுரி, சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல், வாழப்பாடி, ஆத்தூர், சேலம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பைத் தொடருகின்றனர்.

 பழங்குடியினர் அதிக அளவில் உள்ள சிட்லிங்கில் 1959-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு 1974-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

 தற்போது அந்தப் பள்ளியில் 59 மாணவிகள் உள்ளிட்ட 124 பேர் பயின்று வருகின்றனர். நடுநிலைப் பள்ளியானது 12.9.2005-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 123 மாணவிகள் உள்பட 223 பேர் பயின்று வருகின்றனர்.

 இந்தப் பகுதி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சிட்லிங்கில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரி வருகின்றனர்.

 சிட்லிங் ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், 10-ம் வகுப்பில் தேர்ச்சியடையும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால், மாணவிகளை அவர்களின் பெற்றோர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர்.

 இதுகுறித்து சிட்லிங் ஊராட்சித் தலைவர் பி.தேன்மொழி கூறியது: சிட்லிங் ஊராட்சியில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் பயில்கின்றனர்.

 மாணவிகளிடையே கல்வி கற்கும் ஆர்வம் இருந்தாலும், இந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்வியைத் தொடர வாய்ப்பு இல்லை. மாணவிகளை வெளியூரில் கல்வி கற்க பெற்றோர்கள் அனுப்ப மறுக்கின்றனர். இதனால், இந்தப் பகுதிகளில் அதிக இளம் வயதுத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்றார்.

 நம்மங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் தந்தை கூறியது: எனது மகள் அனிதா 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. சிறப்புத் தேர்வு மூலம் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், உள்ளூரில் மேல்நிலைக் கல்விக்கான வசதி இல்லாததால் சிறப்புத் தேர்வை எழுத மகளை அனுமதிக்கவில்லை என்றார்.

 அரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் டில்லிபாபு கூறியது: சிட்லிங்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன். பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்து பள்ளியைத் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கூறியது: சிட்லிங் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் மேல்நிலைக் கல்விக்காக தினமும் 24 கி.மீ. சென்று வரும் நிலை உள்ளது. சிட்லிங்கில் மேல்நிலைப் பள்ளி அவசியம்.

 அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பங்களிப்பாக ரூ.2 லட்சம் அளித்தால், வரும் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 கல்வியில் பின்தங்கி உள்ள தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதி மாணவர்கள் உயர் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அரசானது பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில் புதிய கலைக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. சிட்லிங் போன்ற பகுதியில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், அரசின் எண்ணம் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது.

 எனவே, சிட்லிங்கில் உள்ள பள்ளியைத் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com