மராமத்துப் பணி என்ற பெயரில் 350 பனைமரங்கள் அழிப்பு!

சிவகிரி, ஜூன் 20: திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி பகுதியில் குளங்கள் மராமத்து என்ற பெயரால் 350 பனைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவகிரிக்கு அருகே மேற்குப
மராமத்துப் பணி என்ற பெயரில் 350 பனைமரங்கள் அழிப்பு!

சிவகிரி, ஜூன் 20: திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி பகுதியில் குளங்கள் மராமத்து என்ற பெயரால் 350 பனைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவகிரிக்கு அருகே மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது கோனார்குளம். இக்குளத்துப் பாசனம் மூலம் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இக் குளக்கரையின் இருபுறங்களிலும் நூறு ஆண்டுகளைக் கடந்த நூற்றுக்கணக்கான பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து காட்சியளித்தன.

கற்பக விருட்சமான அவை இப்போது இருந்த சுவடே தெரியாமல் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், சில நாள்களுக்கு முன்பாக அங்கு நடைபெற்ற குள மராமத்துப் பணிதான்.

பொதுப்பணித் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு குளக்கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்றது. அதன்படி, இக் குளத்தின் கரையில் மண்ணை அதிகளவில் குவித்து குளத்தின் இருபுறமும் இருந்த சுமார் 350 பனை மரங்களை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெட்டி அழித்துவிட்டனர்.

இதேபோல வடகால், தென்கால் குளங்கள், தேவிபட்டணம் சண்முகனேரிகுளம் ஆகியவற்றின் கரையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த பனைமரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

முழுமை பெறாத மராமத்துப் பணி: மற்றொரு புறம் கோனார்குளம் மடை மற்றும் அணையின் ஷட்டர் பகுதி பில்லர்களையும் (கான்கிரீட் தூண்கள்) பெயருக்குச் சீரமைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மடையின் மேல் பகுதியில் வெள்ள அபாய நேரங்களில் தண்ணீரைத் திறந்துவிடுவதற்காக ஆள்கள் இறங்கும் பகுதியில் சுமார் 20 அடி உயரம் வரை படிகள் அமைக்கப்படவில்லை. மேலும், அணையின் ஷட்டர் பில்லர்களை வாணம் தோண்டாமல் எழுப்பியிருக்கின்றனர். இதனால் வெள்ள அபாய நேரத்தில் அவை தாக்குப் பிடிக்காது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, கோனார்குளத்தின் கரையாளர் மாடசாமி கூறுகையில், பனைமரங்களை வெட்ட வேண்டிய அவசியமே இல்லை. அதை வெட்டியதால் கரைக்கு ஆபத்துதான் ஏற்பட்டுள்ளது. மடை மற்றும் அணையின் கலிங்கல் (மழைநீர் பெருக்கெடுக்கும்போது தண்ணீர் திறந்துவிடும் பகுதி) ஆகியவற்றிலும் மராமத்துப் பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலர் பி. நடராஜன் கூறியதாவது: நூறாண்டுகள் பழைமை வாய்ந்த பனைமரங்களை தேவையின்றி வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். கரைக்குப் பாதுகாப்பாக இருந்த அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு, கரையை மட்டுமே உயர்த்தியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மராமத்துப் பணியும் முழுமை பெறவில்லை. குளங்களில் ஆளுயரத்துக்கு மரங்களும், செடிகொடிகளும் ஓங்கி வளர்ந்துள்ளன. அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள் கரையில் நின்ற பனைமரங்களைக் காலி செய்துள்ளனர் என்றார் அவர்.

விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் குளங்களின் கரைகளைச் சீரமைப்பது என்பது வரவேற்கத்தக்கதுதான். அதற்காக, கரைக்கு இயற்கை அரணாகவும், ஏழை-எளியோருக்குப் பயனளிக்கும் வகையிலும் இருந்த பனைச் செல்வங்களை அழிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே விவசாயிகளின் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com