மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பூச்சிகளை கட்டுப்படுத்த "பெவேரியா பேசியானா'

புதுச்சேரி: ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.

Updated On :20 செப்டம்பர் 2012, 5:57 am IST

புதுச்சேரி: ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.

 புதுச்சேரி மாநிலம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

 அதேபோல் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரை போன்ற பயிர்களும், மலர்களில் மல்லிகை, கனகாம்பரம், ரோஜா போன்ற பயிர்களும், தோப்புப் பயிர்களான தென்னை, வாழை, மா, கொய்யா, சப்போட்டா, பலா மற்றும் நெல்லி போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

 வளர்ந்து வரும் விஞ்ஞானத்தோடு கூடிய பல வேளாண் உத்திகள் மற்றும் தொழில் நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு அதிக மகசூலை ஈட்டி வருகின்றனர்.

 ஆனால் இச்சூழ்நிலையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பெரும் சவாலாக அமைகின்றன.

 இதுபோன்ற சூழ்நிலைகளில் விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர்.

 இந்த ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயிர் சுற்றுச்சூழல் அமைப்பின் முன்னுக்குப்பின் முரணாக அதிக வீரியத் தன்மை கொண்ட பல மூலக்கூறுகளை தாங்கிய ரசாயன பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உருவாகி விடுகிறது.

 மேலும் பருவநிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றங்களின்போது சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன. இந்த ரசாயன பூச்சிக் கொல்லிகள் சமயங்களில் பயிர்களுக்கு நன்மைத் தரும் பூச்சிகளையும் சேர்த்து அழித்து விடுகின்றன.

 எனவே நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உயர்ரக பூச்சிக்கொல்லிகள் குறைந்த விலையில் கிடைக்கும். இவை விவசாயிகளுக்கு தீமை தரும் பூச்சிகளை மட்டும் நோய் உண்டாக்கி அவைகளை அழிக்கும்.

 இவ்வாறு பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான உயர்ரக பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும்.

 இந்த பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லியை எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது? என்பது குறித்து பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

 கட்டுப்படுத்தும் பூச்சிகள்: பெவேரியா பேசியானா என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி நெல், இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

 தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும். மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

 பருத்தியில் உள்ள அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூண்வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும். கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

 மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழை கிழக்கு கூண் வண்டு மற்றும் தண்டு கூண் வண்டு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

 பயன்படுத்த வேண்டிய அளவுகள் (ஏக்கருக்கு): நெல்- 1 கிலோ, மணிலா-400 கிராம், பயறு வகைகள்- 400 கிராம், பருத்தி- 600 கிராம், கரும்பு- 2 கிலோ, தென்னை-2 கிலோ, சூரியகாந்தி-400கிராம், காய்கறிப் பயிர்கள்- 1 கிலோ, சாமந்தி- 400 கிராம், கனகாம்பரம்- 400 கிராம், வாழை- 2 கிலோ, தேக்கு -2 கிலோ, மா- 4 கிலோ பயன்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.