தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தி 7 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு குறைந்ததால், சில நாள்களாக சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் 16 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மின் தேவை அதிகபட்சம் 12,500 மெகா வாட் என்ற அளவில் இருந்து வருகிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வரை மின் உற்பத்தி சராசரியாக 8500 மெகா வாட் என்ற அளவிலேயே இருந்து வந்தது.
செப்டம்பர் மாதத்துக்கு முன்பு வரை காற்றாலை மின் உற்பத்தி மூலம் 3000 மெகா வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததால், மின் வெட்டு நிலைமை தமிழகத்தில் ஓரளவுக்குச் சீராக இருந்தது. சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் வெட்டு இருந்து வந்தது. செப்டம்பர் 3-வது வாரத்துக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறையத் தொடங்கியதால், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
சென்னையில் 2 மணி நேர அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால், பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 10 மணி நேர மின்வெட்டு அமலில் இருந்து வந்தது.
இந்த நிலையில், நிலைத்த மின் உற்பத்தியைத் தரக் கூடிய அனல் மின் நிலையங்களின் சில யூனிட்டுகளில் சில நாள்களாக தொடர் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் 16 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு செய்யப்பட்டு வருகிறது.
எந்தெந்த யூனிட்டுகளில் பாதிப்பு: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4-வது யூனிட்டில் கடந்த இரண்டு நாள்களாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 210 மெகா வாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இம்மாத இறுதியில்தான் இதில் மீண்டும் உற்பத்தி தொடங்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 5 யூனிட்டுகள் உள்ளன. இதில் 3-வது யூனிட்டில் கடந்த இரண்டு நாள்களாக உற்பத்தி முழுவதுமாகட்க் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து யூனிட்டுகளும் 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. எனவே ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு யூனிட் பழுதடைந்துவிடும். இப்போது பழுதடைந்துள்ள 3-வது யூனிட்டில் புதன்கிழமை முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என மின் வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சிம்மாதிரியில் அமைந்துள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் தலா 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் உள்ளன. இதில் ஒரு யூனிட்டில் சில நாள்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கு தடைபட்டுள்ளது. மேலும் பிபிஎன், ஜிஎம்ஆர் என்பன உள்ளிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைத்து வந்த மின்சாரமும் சில நாள்களாக கிடைக்கப்பெறவில்லை.
புது யூனிட்டுகளில்... இதுமட்டுமன்றி சோதனை ஓட்டத்தின் கீழ் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட விரிவாக்கப்பட்ட யூனிட்டிலிருந்தும், வல்லூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் யூனிட்டிலும் உற்பத்தி செய்யப்பட்டுவந்த அதிகபட்சம் 300 மெகா வாட் அளவு மின்சாரம் கடந்த இரண்டு நாள்களாக தடைபட்டுள்ளது.
இந்த யூனிட்டுகளில் மீண்டும் புதன்கிழமைமுதல் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பாதிப்புகள் காரணமாக தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி இப்போது 7132 மெகா வாட் அளவுக்கு குறைந்துள்ளது.
16 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு: மின் பற்றாக்குறை 5368 மெகா வாட் அளவுக்கு உயர்ந்துள்ள காரணத்தால் மாவட்டங்களில் 16 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் காலை 6 - பகல் 12, மாலை 4 - இரவு 7 வரை மின் வெட்டு செய்யப்படுவதோடு, இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் காலை 6 - 10, பகல் 12 - மாலை 4, மாலை 6 - இரவு 8, இரவு 9-10 வரை மின் வெட்டு செய்யப்படுவதோடு, இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் கடந்த பல மாதங்களாக கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
புது யூனிட்டுகளில் விரைவில் முழு அளவிலான உற்பத்தி தொடங்கினால் மட்டுமே, தமிழகத்தின் மின்வெட்டு நிலைமை சீராகும் என மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

