ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ரூ.1100 கோடியில் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள்: ஜெயலலிதா

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 1100 கோடியில் பல்வேறு திட்டங்களை

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 12:13 am

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 1100 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.

பெருகி வரும் வாகன நெரிசலைக் கருத்தில் கொண்டு சாலை மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரை உயர்மட்ட சாலை அமைப்பது, தமிழகம் முழுவதும் 18 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது, சிறுசேரியில் 2 ஆயிரம் வாகனங்கள் மற்றும் 50 பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்த உதவும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடும் கட்டுதல் ஆகியவை அவர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கை:

சென்னை பெருநகர தகவல் தொழில்நுட்ப சாலையில் பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் உருவாகும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் தரமணி முதல் சிறுசேரி வரை முதல் தொகுப்பாகவும், சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரை இரண்டாவது தொகுப்பாகவும் மொத்தம் 45 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், விரிவான திட்ட அறிக்கை விரைந்து தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டபடி, திருநின்றவூர் முதல் பாடி வரையிலான 22 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் சுங்கம் வசூலிக்க சாத்தியக்கூறு இல்லாத காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சாலை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

எனவே, அதிகளவு வாகனப் போக்குவரத்தால் இப்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தச் சாலை மீண்டும் நகர்ப்புற மாநிலச் சாலையாக எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக, ரூ.168 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, ரூ.98 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிறுசேரியில் வாகன நிறுத்துமிடும்: சிறுசேரியில், சிப்காட் பகுதியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் 2005 ஆம் ஆண்டில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள 4.9 ஏக்கர் நிலத்தில், ரூ.200 கோடி மதிப்பில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 20 அடுக்கில் 2 ஆயிரம் வாகனங்கள் மற்றும் 50 பஸ்கள் ஒரே சமயத்தில் நிறுத்த உதவும் பல்லடுக்கு வாகன நிறுத்தத்துக்கான கட்டடம் கட்டப்படும்.

நான்கு வழியாகிறது பாடி சாலை:

சென்னை உலர் துறைமுகத்துக்காக, திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.126 கோடிக்கு சிப்காட் மூலம் சென்னை துறைமுகக் கழகத்துக்கு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. உலர் துறைமுகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 4 வரை டிரக்குகள் எளிதில் செல்லும் வகையில் இணைப்புச் சாலை அமைக்கும் வகையில், மாவட்ட முக்கியச் சாலையான தண்டலம்-பேரம்பாக்கம்-தக்கோலம் அருகில் 39.40 கிலோமீட்டர் நீள பாடி சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும்.

11 மாவட்டங்களில் 18 ரயில்வே மேம்பாலங்கள்:திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் மற்றும் நந்தியம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மற்றும் போளூர், வேலூர் மாவட்டம் வேலூர், வடுகன்தாங்கல், திருச்சி மாவட்டம் மணக்கால், கீழகல்கண்டார் கோட்டை, சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் மற்றும் வாழப்பாடி, திருவாரூர் மாவட்டம் பேரளம், நீடாமங்கலம் மற்றும் சிங்கலாஞ்சேரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டு, கோவை மாவட்டம் ராசிப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஆகிய இடங்களில் தலா ஒரு மேம்பாலம் என மொத்தம் 11 மாவட்டங்களில் 18 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

இந்தப் பணிகளைச் செயல்படுத்தும் வகையில், நில எடுப்பு, பயன்பாட்டுச் சாதனங்களை மாற்றி அமைத்தல் மற்றும் தல ஆய்வு போன்ற ஆரம்பகட்ட பணிகள் ரூ.201.88 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர்-மானாமதுரை மாநில நெடுஞ்சாலையில் மனக்கரம்பை வரை, இரண்டாம் கட்டமாக 14.27 கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ.98 கோடி மதிப்பில் தஞ்சாவூர் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

நபார்டு வங்கியின் கடன் உதவியுடன், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில், ரூ.300 கோடி மதிப்பில் 131 ஆற்றுப் பாலங்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பில் 215 கிலோ மீட்டர் நீளமுடைய 67 அரசு சாலைகள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.