தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேற்கு மண்டல மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நீலகிரி பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 20 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். விசைத்தறி, விவசாயம் மற்றும் சிறுதொழில்களை அழிக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பொள்ளாச்சியில் கயிறு வாரியம் அமைக்க வேண்டும். விசைத்தறிக் கூடங்களுக்கு மின்கட்டணத்தை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் நீலலோகிததாசன், மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில், மாநிலச் செயலாளர் துரைசாமி, கோவை புறநகர் மாவட்டத் தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி, மாநகர் மாவட்டத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் அமீர்பாஷா ஆகியோர் இதில் பங்கேற்றனர். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








