/

தொழில்நுட்பக் கல்வித் தரத்தை உயர்த்த புதிய திட்டம்

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய அளவில் விரைவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் எஸ்.எஸ்.மன்தா தெரிவித்தார்.

News image
Updated On :11 மே 2013, 8:04 pm

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய அளவில் விரைவில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் எஸ்.எஸ்.மன்தா தெரிவித்தார்.

கோவை பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா, நிறுவனர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 264 பேர் பட்டம் பெற்றனர். இதில் பி.பி.ஜி. கல்லூரியைச் சேர்ந்த 6 பேர் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் எஸ்.எஸ்.மன்தா பட்டங்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஏ.ஐ.சி.டி.இ. வழிமுறைகளில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்படும். நாட்டில் கல்வித் திட்டம் மற்றும் கல்விக்கான உள்கட்டமைப்பு வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை.

இந்தியாவில் 90 சதவீத தொழில்நுட்பக் கல்லூரிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன. ஏ.ஐ.சி.டி.இ. சார்பில் ஆராய்ச்சிப் படிப்புகளை (பி.எச்டி) மேற்கொள்ளும் மாணவர்களுக்கு விரைவில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அவ்வாறு ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை முதல் ஆண்டு ரூ.16 ஆயிரமும், இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை ரூ.18 ஆயிரமும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படாததால் தொழில் துறை குறித்த அறிவு பெறுவதில் பொறியியல் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். எனவே, பொறியியல் மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய அளவில் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் தொடங்கப்படும், தொடங்கி செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க வேண்டிய பாடப்பரிவுகள் சேர்க்கப்படும். இதன் மூலம் பொறியியல் மாணவர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் 17 கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 120 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.