/

பாமகவினர் கைது: மத்திய அரசு தலையிடாது

பாமகவினர் கைது தொடர்பான மாநில அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாது. சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

News image
Updated On :11 மே 2013, 9:35 pm

பாமகவினர் கைது தொடர்பான மாநில அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாது. சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தில்லியில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ரயில்வே அமைச்சர் பன்சால் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆகவில்லை. ஆனால் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தார்மிக பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் விருப்பப்படியே இந்த ராஜிநாமா நடந்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றிய பிறகு வெகு விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும். இந்தியா, இலங்கை நாடுகளுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக இலங்கை அந்த ஒப்பந்தத்தை சரிவர மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் கசசத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.

அதுபோல கச்சத் தீவு விவகாரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் மறுபரிசீலனை செய்யும். பா.ம.க.வினர் கைது தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடாது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்குப் பிரச்னை பற்றி முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு. இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.