/

ஆஸ்கர் விருது சினிமாவுக்கு அளவுகோல் அல்ல: நடிகர் நாசர்

ஆஸ்கர் விருது சினிமாவுக்கான அளவுகோல் அல்ல என்று, நடிகர் நாசர் கூறினார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 9:27 pm

ஆஸ்கர் விருது சினிமாவுக்கான அளவுகோல் அல்ல என்று, நடிகர் நாசர் கூறினார்.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் 9-ஆவது நாள் சிந்தனைக் கருத்தரங்கில் இலக்கிய ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

எனது தந்தையின் விருப்பப்படிதான் சினிமாவில் நடிக்க வந்தேன். சினிமாவில் வெற்றி பெறுவேன் என்று துளியும் எண்ணியதில்லை. ஈரான் நாட்டு சினிமாக்கள் வெற்றி பெறுகிறது என்றால், அதற்கு அவர்களது நாட்டில் நிலவும் சூழ்நிலை தான் காரணம். இந்தியாவில் வர்த்தகத்தை மையமாக வைத்து சினிமா எடுக்கின்றனர். ஈரானில் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கின்றனர். இதனால், தான் ஈரானிய சினிமாவில் இருந்து இந்திய சினிமா வேறுபடுகிறது.

ஐரோப்பிய வெகுஜன சினிமாக்களின் தரம் அதிகம். டைட்டானிக் போன்ற படங்களின் தரம் மிகவும் அதிகம். ஆனால், தமிழகத்தில் எடுக்கப்படும் வெகுஜன சினிமாக்களின் தரம் குறைவு. வர்த்தக சினிமாவால் நல்ல படத்தைத் தர முடியாது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி சினிமாக்களில் நடிக்கும் முன்பு அந்த மொழியில் உள்ள இலக்கிய நாவல்களைப் படிப்பேன். அப்போதுதான் அந்த மக்களின் கலாசாரம், பண்பாட்டை அறிந்து அதற்கேற்ப தத்ரூபமாக நடிக்க முடியும்.

எனக்கு இதுவரை எந்தக் கதாபாத்திரமும் சவாலாக இருந்தது இல்லை. நடிப்பில் சிவாஜிக்கு இருந்த ஈர்ப்பு போல இதுவரை எந்த நடிகரிடமும் கண்டதில்லை. தமிழகத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விருது வாங்கிய நடிகர் நான் மட்டும்தான். விருதுக்காக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆஸ்கர் விருதுக்கும் இந்திய சினிமாக்களுக்கும் தொடர்பு இல்லை. அமெரிக்க சினிமாக்களுக்காக வழங்கப்படும் விருது அது. ஹாலிவுட் படங்களைவிட சிறந்தவை ஐரோப்பிய படங்கள். ஆஸ்கர் விருது சினிமாவுக்கான அளவுகோல் அல்ல.

அமெரிக்க கல்லூரிகளில் எந்தப் படிப்பை படித்தாலும் சினிமா பற்றிய பாடம் உண்டு.

அதேபோல, இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் சினிமாவை ஒரு பாடமாக வைக்க வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதைவிட குப்பையில்லாத, சுத்தமான நகரங்களை உருவாக்குவதுதான் முதல் தேவை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.