/

தலைநகரில் இருப்பது முக்கியமல்ல; துரித நடவடிக்கைதான் முக்கியம்

முதல்வர் தலைநகரில் (சென்னை) இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல; தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும் மக்கள் நலனுக்காக துரித நடவடிக்கைகள் எடுக்கிறாரா என்பதுதான் முக்கியம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2013, 12:43 am

முதல்வர் தலைநகரில் (சென்னை) இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல; தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும் மக்கள் நலனுக்காக துரித நடவடிக்கைகள் எடுக்கிறாரா என்பதுதான் முக்கியம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தவாறு அரசுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு மாதத்துக்கும் மேல் முதல்வர் சென்னையில் இல்லையே என்ற கேள்வியை தானாகவே கேட்டுக்கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான் தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்கிற ரீதியில் கருணாநிதி பதிலளித்துள்ளார். இதைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது எழுதியதுண்டா எனவும் அ

வர் அங்கலாய்த்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் முக்கியப் பிரச்னைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர். பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் பார்ப்பார்கள்.

அது தவிர, முதல்வர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி முடிவு எடுத்தாரா, அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா, முதல்வரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா, முதல்வர் யார், யாருடன் விவாதம் நடத்தினார் என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதமாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதல்வர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகள் எடுக்கிறாரா என்பதுதான் முக்கியம். அந்த முடிவு எந்த இடத்தில் இருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் சில நாள்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசு மூலமாக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கொடநாடு தமிழ்நாட்டின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா? கொடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா? நான் சில நாள்கள் கொடநாட்டில் தங்கியிருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

கொடநாட்டில் தங்கியிருந்த சமயத்தில் நான் எடுத்த ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை மட்டும் இங்கே சொல்வது எனது கடமை எனக் கருதுகிறேன்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், தமிழகத்தின் உரிமைகள் குறித்து ஆலோசித்து வரும் நான், தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதியின் செயல்களையும் வெளிப்படுத்தி வருகிறேன்.

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்தப் பங்குகளை தகுதியுள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த நிதித்துறை முதன்மைச் செயலாளரை தொடர்பு அலுவலராக நியமித்தேன்.

மத்திய அரசு, செபி அதிகாரிகள் ஆகியோருடன் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் விவாதித்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கே இந்தப் பங்குகளை விற்க ஏற்பாடு செய்தனர். தமிழக அரசு இந்த பங்கு விற்பனையில் பங்கேற்றதன் மூலம் பிரச்னைக்குச் சுமுகமான தீர்வு காணப்பட்டது.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திட்டமிட்டதற்கு முன்பாகவே ஆகஸ்ட் 2-ஆம் தேதியே திறந்துவிட உத்தரவிட்டேன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் மற்றும் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளேன். ஈரான் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்கள் மீட்பு, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுதல் போன்ற பிரச்னைகளில் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

கொடநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், பிற அரசு அதிகாரிகள் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அதனால், பல பிரச்னைகளில் உடனுக்குடன் விவாதித்து முடிவுகள் எடுக்க முடிந்தது.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் சரியாக புரிந்துகொள்ளாமல் கருணாநிதி குறை சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டேன். இது தொடர்பாகவும், சட்டம்-ஒழுங்குப் பிர்சனை தொடர்பாகவும் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருடன் கொடநாட்டில் ஜூலை 25-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினேன்.

கலப்புத் திருமணம் செய்துகொண்டிருந்த தருமபுரி இளவரசன் மரணம் அடைந்தவுடன், இதன்காரணமாக ஜாதி மோதல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், இந்த சம்பவம் குறித்து தீர விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிட்டேன். ஒகேனக்கல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 4 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க உத்தரவிட்டேன்.

தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, பாராட்டு விழாவில் பங்குபெறுவது, திரைப்படங்கள் பார்ப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பாலான நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை.

எனவே, தலைநகரிலேயே எப்போதும் முதல்வர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. தலைநகரில் இருந்தாலும், இதரப் பகுதிகளில் இருந்தாலும் மக்கள் நலனுக்காக துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பதுதான் முக்கியம்.

இ-மெயில், செல்போன், விடியோ-கான்ஃபரன்சிங் போன்றவற்றின் மூலம் உரையாடும் வசதிகள் வந்துவிட்ட நிலையில், கருணாநிதியின் அறிக்கை அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது பல அதிகார மையங்கள் செயல்பட்டதையும், அப்பாவி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதையும், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது பதவிக்காக அமைதியாக இருந்தது போன்றவற்றை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

தன்னலமின்றி மக்களுக்கு உழைப்பது தியாகம். தன்னலத்துக்காக தமிழக மக்களுக்கு உழைப்பதுபோல் நடிப்பது வியாபாரம். இதில் கருணாநிதி எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை அறிவார்ந்த தமிழ் மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.