/

அரசு பஸ்ஸில் துப்பாக்கி, கத்திகள் பறிமுதல்

விழுப்புரத்தில், அரசு பஸ்ஸில் திருடுபோன பணத்தை தேடும்போது மர்மப் பையில் இருந்த துப்பாக்கி, இரு கத்திகள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 3 பயணிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2013, 8:54 pm

விழுப்புரத்தில், அரசு பஸ்ஸில் திருடுபோன பணத்தை தேடும்போது மர்மப் பையில் இருந்த துப்பாக்கி, இரு கத்திகள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 3 பயணிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 36 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்ûஸ ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் ஓட்டிவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் நடத்துனராக இருந்தார். இந்த பஸ்ஸில் சென்னையைச் சேர்ந்த கார் கம்பெனி ஊழியர் நாராயணன், முருகன் ஆகியோர் பயணம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மடப்பட்டு என்ற பகுதி அருகே பஸ் வரும்போது நாராயணன் சட்டைப் பையில் இருந்த ரூ.9 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோயிருப்பது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து நாராயணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகவல் தெரிவித்தார். பஸ்ஸில் உள்ள பயணிகளிடம் கேட்டபோது, தங்களுக்கு யாருக்கும் பணம் திருடு போனது குறித்து தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பஸ்ஸை விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். விழுப்புரம் மேற்கு போலீஸார் பஸ்ஸில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.பணத்தை கண்டுபிடிக்க நடந்த இச்சோதனையின்போது பின்பக்க சீட்டில் இருந்து மர்மப் பை கிடைத்தது. அதற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அப் பையை திறந்து பார்த்தனர். திறந்து பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் துப்பாக்கி, ஒரு அடி நீள இரு கத்திகள் இருந்தன.

இவை யாருக்கு சொந்தமானவை, எதற்காக, எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்ற விவரம் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் இருந்தவர்களின் கைரேகைகளை போலீஸார் பெற்றனர். பின்னர் துப்பாக்கியில் இந்த கைரேகை படிந்துள்ளனவா என்று சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் பஸ்ஸில் வந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த மூவரில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கூறுகையில், அந்த துப்பாக்கி யார் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.