தாமதமாகும் தேர்தல் வழக்குகள்: வழக்கு தொடர்ந்தவர்களே வாய்தா வாங்கும் விநோதம்
இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பல நூறு தேர்தல் வழக்குகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாமல் நிலுவையில்


இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பல நூறு தேர்தல் வழக்குகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போன்ற பிரபல தலைவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளன. கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட 14 தேர்தல் வழக்குகளையும் நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். விஜயகாந்துக்கு எதிரான வழக்கு உள்பட சில வழக்குகள் மட்டும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால் பல வழக்குகள் முடிய இன்னும் பல
மாதங்கள் ஆகும் என தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம், தேர்தல் வழக்குகள் 6 மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், எவருடைய தேர்தல் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படுகிறதோ அவரது பதவிக் காலம் முடிந்த பிறகுதான் பல வழக்குகள் விசாரணைக்கே வருகின்றன என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் இன்று பல நூறு தேர்தல் வழக்குகள் உரிய காலத்துக்குள் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த கால தாமதத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருவரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியாக வேண்டும். இந்த நடைமுறை நிறைவு பெற பல நாள்கள் ஆகிறது.
அடுத்து யாரை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடரப்படுகிறதோ அவர் தனக்கு எதிரான மனுவை முழுமையாக நிராகரிக்கக் கோரியோ அல்லது குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரியோ மனு தாக்கல் செய்வார். இதற்கு தேர்தல் வழக்கைத் தொடர்ந்தவர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது நீதிபதி விரிவான விசராணை நடத்தி, நிராகரிப்பது பற்றியோ அல்லது ஏற்றுக் கொள்வது பற்றியோ முடிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். பிறகு குறிப்பிட்ட அந்தத் தொகுதியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தொகுதியின் தேர்தல் அதிகாரி, வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸாருக்கு சம்மன் அனுப்பி ஆவணங்களைப் பெற வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக சாட்சியங்கள், குறுக்கு விசாரணை, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவை முடிந்து இறுதியில் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு சட்டப்படியான இந்த ஒவ்வொரு நடைமுறையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளதால் பல வழக்குகளில் ஆண்டுக் கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.
இவற்றையெல்லாம்விட ஏதோ ஒரு தரப்பினர் தொடர்ந்து வாய்தா வாங்கி வழக்கின் விசாரணையை தள்ளிபோடுவதுதான் பெரும்பாலும் கால தாமதத்துக்கு காரணமாக உள்ளது. விநோதமாக வழக்குத் தொடர்ந்தவர்களே வாய்தா வாங்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
உதாரணத்துக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான தேர்தல் வழக்கைக் கூறலாம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ கண்ணப்பன் வழக்குத் தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்த வழக்கில் ராஜ கண்ணப்பன் தரப்பினரே பல முறை வாய்தா வாங்கும் நிலை காணப்படுகிறது.
இது குறித்து மூத்த வழக்குரைஞரான பி.வில்சன் கூறும்போது, தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த சட்டப்படி ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையே வாதி, பிரதிவாதிகள் பயன்படுத்துகின்றனர். இந்த சட்ட வரம்புகளுக்கு அப்பால் கால தாமதம் செய்தால் அதனை நீதிபதிகள் அனுமதிப்பதில்லை. எனினும் நீதிபதிகளுக்கு உள்ள பணிச் சுமையை ஒரு காரணமாகக் கூறலாம்.
ஏராளமான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள், அவற்றுடன் சேர்த்து தேர்தல் வழக்குகளையும் விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி தேர்தல் வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக பிரத்யேகமாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அதற்கு முன்னதாக உயர் நீதிமன்றங்களில் தற்போது காலியாக உள்ள நீதிபதி பதவியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆறு மாதத்துக்குள் தேர்தல் வழக்கை முடிக்காவிட்டாலும், சம்பந்தப்பட்டவரின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பாவது வழக்கு முடிவுக்கு வரும் என்கிறார் வில்சன்.
எப்படி இருப்பினும் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதால், நீதிபதி சதாசிவம் வலியுறுத்துவதுபோல தேர்தல் வழக்குகளை விரைவாக முடித்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...