தபால் துறையில் காலிப் பணியிடங்களால் ஏடிஎம் தொடங்குவதில் சிக்கல்
தபால் துறை "இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும்.


தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களால், ஏடிஎம் சேவை தொடங்குவதற்கான பணிகள் முடங்கியுள்ளன.
தபால் துறை "இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் நிலையங்கள் வரை இத்துறையின் கீழ் செயல்படுகின்றன. அவற்றில் 89 சதவீத தபால் நிலையங்கள் ஊரகப் பகுதிகளிலும், 11 சதவீத தபால் நிலையங்கள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சராசரியாக 7,144 பேருக்கு ஒரு தபால் நிலையம் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை நகர், கோவை மேற்கு, மதுரை தெற்கு, திருச்சி மத்திய மண்டலம் என 4 மண்டலங்களாக தபால் துறை பிரிக்கப்பட்டுள்ளது.
தபால் துறை வழங்கி வரும் சேவைகளில் "சேமிப்புத் திட்டங்கள்' பொதுமக்களுக்கு அதிக பயன் அளிப்பவை. நாடு முழுவதும் பல கோடி மக்கள் சேமிப்புக் கணக்குகள் மூலமாகப் பயன்பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 77 ஆயிரம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன.
தபால் துறையை பொறுத்தமட்டில் எந்த ஒரு கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாலும், பணம் தேவை எனில் அதே கிளைக்கு சென்று மட்டுமே எடுக்க முடியும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வங்கிகளில் உள்ளது போல் தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்காக தபால் துறையில் உள்ள சேமிப்புக் கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு, ஜனவரியில் ஏடிஎம் சேவை பயன்பாட்டுக்கு வரும்; அதன் பிறகு பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும் என்று ஏற்கெனவே தபால் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தபால் நிலையங்களில் உள்ள பணியாளர் பற்றாக்குறை காரணமாக, இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
தமிழகத்தில் தபால் நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறை உள்ள பல இடங்களில் சேமிப்புக் கணக்குகளை சரிபார்த்து அனுப்பும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தகவல்கள் அனைத்தும் புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவை பதிவு செய்யப்படும். பிறகு தில்லி தவிர வேறு ஒரு நகரத்தில் அதே தகவல்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே ஏடிஎம் சேவைக்கான பணிகள் தொடங்கும் என்றார்.
கோவை கோட்ட தபால் துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் குருநாதன் கூறுகையில், ஏடிஎம் சேவை தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தற்போது தயார் நிலையில் உள்ளன. புதுதில்லியில் இருந்து அனுமதி வந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும். முதலில் மாவட்டத் தலைமை அலுவலகங்களில் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...