நூல் விலை தொடர்ந்து உயரும் அபாயம்: பனியன் தொழில் துறையினர் அச்சம்
பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருப்பூர் பனியன் தொழில் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.


பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருப்பூர் பனியன் தொழில் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஜவுளித் தொழிலே பிரதானமாக உள்ளது. இத் தொழிலுக்கு மூலப்பொருளாக இருக்கும் பருத்தி விலை அதிகரித்து, நூல் விலையும் உயர்ந்து வருவதால் இத் தொழில் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி; உள்நாடு வர்த்தகம் ரூ.7 ஆயிரத்து 500 கோடி என ரூ.20 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதில், மூலப்பொருளான பருத்தி நூல் கொள்முதல் 60 சதவீதமாக உள்ளது.
நூல் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இப்போது 40 சதவீத நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இச் சூழ்நிலையில் மூலப்பொருளான பருத்தி விலையும் அதிகரித்து வருவதால் நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்திவிட்டன. மேலும், பருத்தி ஏற்றுமதியைவிட நூல் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறுகிறது.
மூலப்பொருளான பருத்தியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவந்த சீனா, இப்போது நூலை இறக்குமதி செய்கிறது. இதனால், நூற்பாலைகள் அதிகளவில் நூல் ஏற்றுமதி செய்கின்றன. இதனால், உள்நாட்டில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கடந்த இரு மாதங்களில் பருத்தியை முழுவதுமாக வியாபாரிகள் கொள்முதல் செய்து முடித்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் ரூ.31 ஆயிரமாக இருந்த பருத்தி விலை (ஒரு கேண்டி) இப்போது ரூ.39 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ரூ.45 ஆயிரத்தை எட்டிவிடும் என்றும், அதனால் நூல் விலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பின்னலாடை தொழில் துறையினர் உள்ளனர்.
வியாபாரிகளின் பிடியில் பருத்தி விலை உள்ளதாலும், ஊக பேர வர்த்தகத்தாலும் பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஏற்றுமதி செய்வதற்காக துறைமுகத்தில் பல ஆயிரம் டன் பருத்தி, பல நாள்களாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன. விலை இன்னும் அதிகமாகும் என்ற நோக்கத்தில் இப்படிச் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் தொழில் துறையினர்.
இதுகுறித்து, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறியது: வரும் மாதங்களில் பருத்தி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இதற்கேற்ப ஏற்றுமதி நிறுவனங்கள், வெளிநாட்டு ஒப்பந்தங்களில் விலை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஒரு சில ஒப்பந்த அனுமதி கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.
பருத்தியை அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் இடம் பெறச் செய்வதால் விலையைச் சீராக வைக்கலாம். ஊக பேர வர்த்தகத்தில் இருந்து பருத்திக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மத்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்து வைத்திருக்கும் பருத்தியை வெளிச் சந்தைக்கு விட்டால்கூட விலை உயராமல் சீராக வைக்க இயலும் என்றார்.
ஏற்றுமதியாளர் ராஜா சண்முகம் கூறியது: பின்னலாடைத் தொழில் துறைக்கு நூல் தட்டுப்பாடு என்கிற நிலை இப்போது வரை இல்லை. ரொக்கத்துக்கு கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், கடனுக்கு நூல் வாங்குவதில் சீரான அணுகுமுறையைக் கையாளும் நிறுவனங்களுக்கு நூற்பாலைகள் தொடர்ந்து நூல் வழங்கி வருகின்றன. நூல் விலை உயர்வு போன்ற காரணங்களை உள்நோக்கிப் பார்க்காமல், ஏற்றுமதி வர்த்தகத்தில் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களில் அதை ஈடுசெய்வது மற்றும் உற்பத்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத்தினால் தாக்குப்பிடிக்கலாம் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியது: உற்பத்தி செய்த நூலை இருப்பு வைத்து, அதன் விலையை நூற்பாலைகள் உயர்த்தி வருகின்றன. நூல் விலை அதிகரிப்பால் ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகின்றன. போட்டி நாடுகளின் விலை, திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தே, வெளிநாட்டு வர்த்தக ஏஜெண்டுகள் வர்த்தக ஒப்பந்த அனுமதியைத் தருகின்றனர். நூல் விலை அதிகரிப்பால் போட்டி நாடுகளுடனான வர்த்தகத்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற ஜவுளி நகரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தருவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கிறது. இதனால், பஞ்சு மற்றும் நூல் விலை சீராக இருக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...