ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

கருணாநிதியின் கபட நாடகம்: ஜெயலலிதா

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது அவரது கபட நாடகம்

News image
Updated On :20 மார்ச் 2013, 7:12 pm IST

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது அவரது கபட நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை இப்போதைய சூழலில் உறுதியான பலன் அளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:-

மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதாக திமுக அறிவித்திருப்பது "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் உச்சகட்ட போர் நடந்தபோது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி.

அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவோ நடவடிக்கை எடுக்காமல், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தி தமிழர்களை ஏமாற்றியவர்.

இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று பிரகடனப்படுத்தி தமிழினத்தை நம்ப வைத்து பதுங்குக் குழிகளில் பாதுகாப்பாக இருந்த இலங்கைத் தமிழர்களை வெளிவரச் செய்து அவர்கள் அனைவரும் ஈவு இரக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்டதற்கு கருணாநிதிதான் காரணம். அந்தச் சமயத்தில் மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இதை கருணாநிதி செய்யவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய துரோகமாகும்.

இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்து போர்க் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டப் பேரவையில் எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவாவது மத்திய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். இதையும் கருணாநிதி செய்யவில்லை. இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர் இழைத்த இரண்டாவது துரோகம்.

ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ததே இந்தியாதான் என்று பிரதமரின் கடிதத்தை வெளியிட்டு மத்திய அரசே அனைவருக்கும் தெரியப்படுத்தியது. அப்போதும் கருணாநிதி அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இது, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அவர் செய்த மூன்றாவது துரோகம். ஒரு வேளை, அவ்வாறு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போகச் செய்த சூழ்ச்சியில் கருணாநிதிக்கும் பங்குண்டு போலும்! எனவே தான் அதைப் பற்றி அப்போது அவர் எதையும் சொல்லவில்லை.

வாய்ப்புகளை நழுவ விட்டார்: மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணாத் துயரங்கள் அனைத்துக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது என்ற அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளார் என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.