

சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது.
தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளையும், இலக்கியங்களையும் மீட்டுத் தந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இவர் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஓலைச் சுவடிகள், கையெழுத்து ஏடுகள், நூல்கள் ஆகியவற்றை பத்திரமாக மீட்டு, பதிப்பித்தார்.
இன்று தமிழில் உள்ள பெரும்பான்மையான இலக்கியங்கள் இவரால் மீட்கப்பட்டவை. புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள், இவரின் முயற்சியாலேயே தமிழர்களுக்குக் கிடைத்தது.
கும்பகோணம் உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்ற 1903-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.
அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்.
இரண்டாம் உலகப்போரின் போது சென்னையில் இருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார். காலப்போக்கில் உ.வே.சா.வின் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த திருவல்லிக்கேணி வீடு, பிறருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டின் உள்பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதனைக் கண்டித்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்தனர்.
தமிழின் இலக்கியங்களை மீட்டுத் தந்த உ.வே.சா.வின் நினைவாக அந்த வீட்டை உ.வே.சா. நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டுள்ளனர். இப்போது அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.