பயன்பாட்டுக்கு வராத 538 சுனாமி குடியிருப்புகள்!
கடலூர் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்புகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாததாலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததாலும் 538 குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து வருகின்றன.


கடலூர் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்புகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாததாலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததாலும் 538 குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் 51 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 617 பேர் இறந்தனர். 38 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ராஜீவ்காந்தி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடலூர் முதுநகர் செல்லக்குப்பம் குட்டியாண்டவர் கோயில் அருகே 538 வீடுகளை கட்டும் பணி 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.14.75 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் 325 சதுர அடி கொண்ட வீடுகள் தலா ரூ.2.75 லட்சத்தில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கட்டப்பட்ட வீடுகளில் பெரும்பாலானவை மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு போதுமான அடிப்படை வசதி செய்யப்படவில்லை. வீடுகளின் தரை மணல் மேடாகவும், மேல்பூச்சு உதிர்ந்தும், சில வீடுகளில் விரிசலும் காணப்படுகிறது. சாலை வசதியும் சரியாக இல்லை. சரளைக்கற்களால் போடப்பட்ட சாலைகள் மழைக் காலங்களில் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் சிலர் கூறியது:
வீடுகள் ஒதுக்கப்பட்ட சிலரும் இங்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இங்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு, மின்சார வசதி எதுவும் கிடையாது. வீடுகள் உடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் எப்படி இங்கு வசிக்க முடியும்.
அண்மையில் இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. நகராட்சி சார்பில் வாரத்துக்கு இரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இங்கிருந்து நகருக்கு செல்ல முக்கிய சாலைக்கு 2 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. சுமார் 250 மீட்டர் தூரமுள்ள பாதையை தனியாரிடமிருந்து பெற்றுத்தந்தால் வசதியாக இருக்கும். சொந்தச் செலவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு அதில் போடப்பட்டிருந்த கைப்பம்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அந்த அளவுக்கு இங்கு திருட்டு பயம் உள்ளது. தற்போது ஒரு வாரமாக போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.
சில வீடுகளை அருகிலுள்ள மக்கள் ஆக்கிரமித்து மீனவர்களை மிரட்டி வருகின்றனர் என்றனர்.
வீடுகள் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டுள்ளன. இரண்டு வரிசையில் உள்ள வீடுகளின் பின்பக்கம் அரை அடி கூட இடைவெளி இல்லை. ஒரு வீட்டின் சமையலறை ஜன்னலுக்கு நேர் எதிரில் மற்றொரு வீட்டின் கழிவறைக் கதவு உள்ளது.
இந்த வீடுகளும் அவர்களுக்கு உரிய காலத்தில் ஒப்படைக்கப்படாததால், சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்களது பழைய வீடுகளை செப்பனிட்டு அதிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால், கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் யாருக்கும் பயனின்றி உள்ளன என ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதிமீனவ மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...