திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சதமடித்த சர்க்கரை நோயாளி!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.ராவ்,சர்க்கரை நோயை வென்று 100-ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2014, 9:13 pm

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.ராவ்,சர்க்கரை நோயை வென்று 100-ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார்.

அவரது மனைவி சுமதி மற்றும் குடும்பத்தினர்-நண்பர்கள் 40 பேருடன் தனது 100-ஆவது பிறந்த நாளை சனிக்கிழமை (பிப்.15) அவர் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.

சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கபனிபதி ராவ் என்ற ஆர்.கே.ராவ் (99). இவர், கடந்த 15.2.1915 இல் கர்நாடக மாநிலம் ராமோ ஹல்லி என்ற இடத்தில் பிறந்தார்.

தனது இளம் வயதிலேயே உணவகங்கள் நடத்துவதில் ஆர்வம் காட்டிய ஆர்.கே.ராவ், படிப்படியாக முன்னேறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை நடத்தி வந்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட,

தனது குடும்ப டாக்டர் சேஷய்யா மற்றும் டாக்டர் சேஷய்யா மருத்துவ மையத்தின் டாக்டர் பாலாஜி ஆகியோரின் மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். அதாவது, உடற்பயிற்சி-உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து மன உறுதியுடன் ஆர்.கே.ராவ் பின்பற்றுவதால், உடல் அளவிலும் மனதளவிலும் நன்றாக உள்ளார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து ஆர்.கே.ராவ் கூறியதாவது:-

எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தற்போது மனைவி, மகள், சகோதரர், சகோதரி உள்பட 12 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் விஷயமாக லண்டன், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். இதனால் தற்போது வரை பல்வேறு ஆங்கில நாளிதழ்களையும் தடையின்றி வாசிக்க முடிகிறது. பக்தி பாடல்கள் கேட்பதிலும், தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதும் தான் எனது தற்போதைய பொழுதுபோக்காக உள்ளது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ஒரு முறை தவறாமல் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகிறேன். எனது கவலைகளை நான் எப்போதும் மனதுக்கு கொண்டு செல்வதில்லை. என்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

உண்மையான நண்பர்கள், அக்கறையுடன் கூடிய மருத்துவ கவனிப்பு, இயற்கை உணவுகள் இவற்றோடு உடற்பயிற்சிகளால் எனது உடல்நிலை சிறப்பாக உள்ளது. மது, புகையிலை உள்ளிட்ட தீய பழக்கங்களை இளைஞர்கள் பின்பற்றாமல் அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்தால் எனது வயதையும் தாண்டி அவர்கள் நலமோடு வாழ முடியும் என்கிறார் ஆர்.கே.ராவ்.

இது குறித்து அவரது மனைவி கே.சுமதி (69) கூறியதாவது: எனது கணவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சி.ராஜாஜி,எம்.ஜி.ஆர், கல்வியாளர் ராமச்சந்திர உடையார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களிடம் நட்பு கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவதில்லை. காலை, மதியம், இரவு மூன்று வேளையும் பழங்கள், பழச்சாறு ஆகியவற்றையே தினமும் சாப்பிட்டு வருகிறார். பிறந்த நாள் கேக்கை சனிக்கிழமை (பிப்.15) சுவைத்தார்.

தனது 97-வது வயது வரை தொழில் தொடர்பாக எந்த இடங்களுக்கும் காரை தானாகவே ஓட்டிச் செல்வார். சர்க்கரை நோய் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு, யோகாசனம் ஆகியற்றை இன்று வரை கடைப்பிடிப்பதால் மிகுந்த ஆரோக்கியமாக உள்ளார்.

தன்னால் முடிந்தவரை ஏழை மாணவர்களின் கல்விக்கு இப்போது வரை உதவி செய்து வருகிறார் என்றார் கே.சுமதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.