மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முடக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்!

மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வரங்குகள், கருத்தரங்குகளைச் செழுமையோடு நடத்திவந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,

Updated On :16 டிசம்பர் 2015, 7:24 pm

மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வரங்குகள், கருத்தரங்குகளைச் செழுமையோடு நடத்திவந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தற்போது முழுமையாக முடக்கப்பட்டிருப்பதாக தமிழறிஞர்கள் கருதுகின்றனர்.
 தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மொழி தொடர்பான ஆய்வுகளைப் பரவலாக்கும் வகையில் 2008-ஆம் ஆண்டு சென்னையில் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்- "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்'.
 மத்திய அரசின் நேரடிப் பார்வையில், நிதியுதவியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 2009-ஆம் ஆண்டு முதல் வேகமாகச் செயல்படத் தொடங்கியது. 12 புலங்கள் அமைக்கப்பட்டன. "செம்மொழி' என்ற பெயரில் ஆங்கிலம், தமிழில் மாத இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது. இது 2011-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நிறுத்தப்பட்டது.
 மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடைபெற்றன; ஆய்வுக்கோவைகளும் வெளியாயின.
 இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கப்படுவது வெகுவாகக் குறைந்து, 2014-15-ஆம் ஆண்டில் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டுகின்றனர் தமிழறிஞர்கள்.
 அத்தோடு, இதுவரை ஆண்டுக்கு ரூ. 11 கோடி வரை நிதி வழங்கிவந்த மத்திய அரசு, கடந்த நிதியாண்டு முதல் ரூ. 5 கோடியாக அந்த நிதியைக் குறைக்கவும் திட்டமிட்டிருப்பது செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை முற்றிலும் முடக்கும் செயல் என்கின்றனர்.
 நிரந்தரப் பதவிகள்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மிக முக்கியப் பதவியிடங்களான "இயக்குநர்', "பதிவாளர்' பதவியிடங்கள் சுமார் 5 ஆண்டுகளாகவே நிரந்தரப் பதவியிடங்களாக இல்லாமல், "பொறுப்பு' பதவியிடங்களாகவே இருந்து வருகின்றன.
 நிறுவனத்தின் பணியாளர் சங்கத் தலைவராக இருக்கும் ஆரோக்கியதாஸ் இதுதொடர்பாக பிரதமருக்கு தொடர்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு 4 பதில்கள் வந்திருக்கின்றன, விரைவில் நிரந்தர இயக்குநர் பதவியிடம் நிரப்பப்படும் என்று!
 மாநிலக் கல்லூரியில் இருந்து ஒரு பேராசிரியர் சுமார் 5 ஆண்டுகளுக்கு அயல்பணியில் பதிவாளராக இருந்திருக்கிறார். அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட பதிவாளர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இவரும் அயல்பணியில்! 12 புலங்களாகத் தொடங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தற்போது வெறும் 7 தாற்காலிகத் திட்டங்களாகச் சுருக்கப்பட்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார் ஐம்பெரும் குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம்.
 பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வரான இவர், "ஐம்பெருங்குழு, எண்பேராயம் என தொடக்கத்தில் அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்பட்டு, தாற்காலிக ஆட்சிக் குழு உருவாக்கப்பட்டதாகவும், அதில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தமிழறிஞர்கள் இல்லை' என்றும் குற்றம்சாட்டுகிறார்.
 கருத்தரங்குகள்: 2014-15-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு வரவில்லை. இதனால், இந்த நிதியாண்டுக்கான கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் ஒன்றுகூட மாநிலம் முழுவதும் எங்கும் நடைபெறவில்லை.
 இந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கானத் திட்டக் கருத்துருகளைக் கேட்டுப் பெற வேண்டிய நேரம் தொடங்கியிருக்கிறது. அத்தோடு, கடந்த நிதியாண்டில் கருத்தரங்கு நடத்தியவர்களுக்கும் கடைசியாகத் தர வேண்டிய தவணைத் தொகையும் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் தமிழறிஞர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
 சொந்த மொழி குறித்து அவ்வப்போது பேச்சுப் பெருமிதங்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில்தான் இந்த அவலம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
 சொந்தக் கட்டடம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக சென்னை பெரும்பாக்கத்தில் 6.71 ஹெக்டேர் நிலம் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் நிதி ரூ. 3 கோடியிலிருந்து சுற்றுச்சுவர் மட்டும் எழுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
 அதன்பிறகு, ரூ. 250 கோடியில் கட்டடங்கள் எழுப்பும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியும், கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீண்டும் எழுச்சியோடு நடத்துவதற்கு முதல் கட்டமாக நிரந்தர இயக்குநர், பதிவாளர் பணியிடங்களை நிரப்பி, தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.