

இலக்கிய உலகில் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாதெமி விருது பெறுவதில், தென் மாவட்டம் தொடர்ச்சியாக சாதனை புரிந்து வருகிறது. குறிப்பாக, நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து விருது பெற்றுள்ளனர். இதுமட்டுமல்லாது, சாகித்ய அகாதெமி இதுவரை வழங்கிய விருதுகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான விருதுகள் தென் மாவட்டங்களுக்கே கிடைத்துள்ளது. இதில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களே முன்னிலையில் உள்ளன.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எழுத்து இலக்கியத்துக்கு தனியாகவும், காட்சிக் கலைக்கு தனியாகவும், நடனம், நாடகம், இசை ஆகியவற்றுக்கு தனியாகவும் என 3 தேசிய அகாதெமிகள் அமைக்கப்பட்டன. இந்த அகாதெமிகள் மூலம் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்களைத் தேர்வு செய்து கௌரவித்தல், விருது வழங்குதல், துறை மேம்பாடு ஆகியவற்றுக்கான பணிகளை மத்திய அரசு செய்து வந்தது.
இதில், எழுத்து இலக்கியத்துக்காக அமைக்கப்பட்ட தேசிய அகாதெமியானது, 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாகித்ய அகாதெமி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், 1954-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி முறைப்படி அகாதெமி தொடங்கப்பட்டது.
முதன்முதலாக 1955-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளைக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர் எழுதிய "தமிழ் இன்பம்' என்ற கட்டுரைக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 1965-இல் பி. ஸ்ரீஆச்சார்யா (ஸ்ரீராமானுஜர் வரலாறு), 1970-இல் கு. அழகிரிசாமி (அன்பழைப்பு - சிறுகதை), 1978-இல் வல்லிக்கண்ணன் (புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்), 1983-இல் தொ.மு.சி. ரகுநாதன் (பாரதி-காலமும் கருத்தும்), 1990-இல் சு. சமுத்திரம் (வேரில் பழுத்த பலா), 1991-இல் கி. ராஜநாராயணன் (கோபல்லபுரத்து மக்கள்), 1994-இல் பொன்னீலன் (புதிய தரிசனங்கள்), 1997-இல் தோப்பில் முகமது மீரான் (சாய்வு நாற்காலி), 2000-இல் தி.க.சி. என்ற தி.க.சிவசங்கரன் (விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்), 2007-இல் நீல. பத்மநாபன் (இலை உதிர்காலம்), 2010-இல் நாஞ்சில் நாடன் (சூடிய பூ சூடற்க), 2012-இல் டி. செல்வராஜ் (தோல்), 2013-இல் ஜோ டி குரூஸ் (கொற்கை), 2014-இல் பூமணி (அஞ்ஞாடி), 2015-இல் ஆ. மாதவன் (இலக்கியச் சுவடுகள்) என மொத்தம் 16 விருதுகளை தென் மாவட்டங்களைச் சேர்ந்த படைப்பாளர்களே பெற்றுள்ளனர்.
அகாதெமி தொடங்கிய காலத்தில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரை 60 ஆண்டுகளில் 1957, 1959, 1960, 1964, 1976 ஆகிய 5 ஆண்டுகளுக்கு தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் 55 விருதுகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 16 விருதுகள் கிடைத்திருப்பது பெருமைக்குரியது. குறிப்பாக, ஒருங்கிணைந்த நெல்லைச் சீமைக்குத்தான் இந்தப் புகழ் கிடைத்துள்ளது. இதிலும், மைல்கல்லாக தொடர்ச்சியாக 2012-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு வரையும் 4 ஆண்டுகள் நெல்லைச் சீமைக்கு இந்த விருது கிடைத்திருப்பது சிறப்புக்குரியது.
இதுதொடர்பாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கூறியதாவது:
குமரி கடற்கரையும், நெல்லை, தூத்துக்குடி கடற்கரை மணலும், தாமிரவருணி நதிக் கரை மணலும் அதன் வாழ்க்கை முறையுமே இத்தகைய சாதனைக்கு அடித்தளமாக இருந்து வருகிறது. தொல்காப்பிய காலம் தொட்டே இந்தப் பெருமை உள்ளது. விருது பெற்றவர்கள் சிலர் இருந்தாலும், விருது பெறாத பலரும் இந்த மண்ணைச் சார்ந்தவர்களே. குறிப்பாக, பல்வேறு படைப்புகளில் சிறந்து விளங்கிய சுந்தரராமசாமிக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கவில்லை. இப்போது (2015) விருது பெற்றுள்ள ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ள விருதும் காலம் கடந்து கிடைத்துள்ளது. இலக்கியச் சுவடுகள் நூலுக்கு முன்பாக, பல்வேறு சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார். 82 வயதில் இப்போதுதான் அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது என்றார் அவர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரான பேராசிரியர் தொ. பரமசிவன் கூறியதாவது:
காலனி ஆதிக்கம் தொடங்கி முடியும் வரையில் கல்வியறிவு சதவீதத்தில் சிறந்து விளங்கியது நெல்லைச் சீமை. நூற்றாண்டுகளைக் கடந்து இங்குள்ள பல கல்வி நிறுவனங்களும் இதற்குச் சான்றாக உள்ளன. குறிப்பாக, பார்வையற்றோர் பள்ளி, காது கேளாதோர் பள்ளியும் இங்குதான் உள்ளன. குறைபாடுகள் உள்ளவரையும் கல்வியில் சிறந்து விளங்கச் செய்த மாவட்டம்.
எந்தப் பகுதியில் வாசிப்புத் திறனும், கல்வியறிவும், அதன் தாகமும் அதிகமாக இருக்கிறதோ அங்கு படைப்பாளிகள் அதிகம் இருப்பர். இதன்படி சாகித்ய அகாதெமியில் தென் மாவட்டம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்றார் அவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க திருநெல்வேலி மாவட்டத் தலைவர் இரா. நாறும்பூநாதன் கூறியதாவது:
உலகில் சிறந்த நாகரிகம் நதிக்கரை நாகரிகம்தான். நதிக் கரையில்தான் கலை, இலக்கியம், விவசாயம், இசை, கட்டடக் கலை தோன்றியது. அந்த வகையில், தாமிரவருணி நதிக்கரை நாகரிகத்தில் பிறந்து அந்த நாகரிகத்தைக் கண்டு, வளர்ந்தவர்கள், அவற்றைப் பற்றியே அழகுற எழுத முடியும் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், 5 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாதது, தகுதியான பலருக்கு இன்னும் விருதுகள் கிடைக்காததும் ஒரு குறையே. குறிப்பாக, திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்பிரியன் உள்ளிட்ட பலரும் அதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர். அவரவர் காலத்திலேயே அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியது அகாதெமியின் கடமை.
சாகித்ய அகாதெமி விருது பெற்றோரில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும், இன்னும் பிறர் தஞ்சை தரணியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.