தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தரங்கம்பாடியில் டென்மார்க் மாணவர்களின் கலாச்சார சுற்றுலா

நாகை மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரங்கம்பாடிக்கு டென்மார்க் நாட்டு மாணவர்கள் கலாச்சார பயணமாக வந்து கடந்த 10 நாள்களாக தங்கியிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2015, 7:22 am

நாகை மாவட்டத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரங்கம்பாடிக்கு டென்மார்க் நாட்டு மாணவர்கள் கலாச்சார பயணமாக வந்து கடந்த 10 நாள்களாக தங்கியிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.

இந்தியாவில் டென்மார்க் ஆளுகையின் கீழ் வர்த்தக மையமாக திகழ்ந்த தரங்கம்பாடிக்கும் டென்மார்க் நாட்டிற்கும் கலாசார, பண்பாட்டு ரீதியாக நீண்ட கால தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்த தொடர்பு இன்றும் நீடிக்கும் விதமாக அவ்வப்போது தரங்கம்பாடியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. டென்மார்க் நாட்டினர் பலர் அடிக்கடி தரங்கம்பாடி பகுதிக்கு வந்து செல்வது,இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது,டென்மார்க் நாட்டின் வரலாற்று சின்னமாக திகழும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட பகுதிகளை பார்த்து செல்வது,இரு நாட்டு வர்த்தக,பண்பாட்டு உறவுகள் குறித்த நூல்களை வெளியிடுவது போன்ற நிகழ்வுகள் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் டென்மார்க் நாட்டிலிருந்து மாணவர்கள் தரங்கம்பாடி பகுதிக்கு வந்து இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, இரு நாடுகளுக்கிடையே இருந்த தொடர்பை உணர்த்தும் வரலாற்று சின்னங்கள் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து அறிந்து செல்கின்றனர்.

அது போல கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் டென்மார்க் நாட்டில் உள்ள "டிராங்குபார் அசோசியேஷன் " என்ற அமைப்பின் மூலமாக டென்மார்க் வெஸ்ட்ப்பின்  எப்டர் ஸ்கூலை சேர்ந்த 35 மாணவர்களும், ஆசிரியர்கள் 7 பேரும்  தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்கள் கடந்த 10 நாள்களாக தரங்கம்பாடியில் தங்கியிருந்து தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்குச் சென்று தமிழக மக்களின் சமூக,பொருளாதார, கலாச்சார, மத ரீதியான நிலைகளை அறிந்துகொண்டனர். கிராம மக்களிடமும் ஆர்வமாக பழகினர். தங்கள் மூதாதையர்களின் வியாபார தலமாக  விளங்கிய தரங்கம்பாடியின் முக்கிய வீதிகள் சிலவற்றை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

 தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டின்  "டிராங்குபார் அசோசியேஷன்" சார்பில் நடத்தப்பட்டு வரும் கடல் சார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு அங்கு டென்மார்க்-இந்திய நாடுகளின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஒரு நூலகத்தையும், அதனருகில் ஒரு சிற்றுண்டி உணவகமும் அமைத்திட மாணவர்கள் உதவி செய்தனர். மேலும் இந்திய உணவு வகைகளை மாணவர்கள் விரும்பி சாப்பிட்டனர்.

மேலும் மக்களின் மத நல்லிணக்கத்தை புரிந்து கொள்ளும் வகையில் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, பூம்புகார் கடற்கரைக்கும் பயணம் மேற்கொண்டனர். 10 நாள் கலாச்சார பயணத்தை  முடித்துக் கொண்டு டென்மார்க் நாட்டு மாணவர்கள் திங்கள்கிழமை தரங்கம்பாடியிலிருந்து தங்கள் நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி வணிகவியல்துறை முன்னாள் தலைவரும் வரலாற்று ஆர்வலருமான பேராசிரியர் பி.மரியலாசர் மாணவர்களுக்கு தரங்கம்பாடியின் வலாற்று முக்கியத்துவம் குறித்தும்,மக்களின் பண்பாடு,வாழ்க்கை முறைகள்  குறித்தும் விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.