ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: கடைகளில் தலைக்கவசம் விற்பனை அமோகம்! 

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,

News image
Updated On :9 ஜூன் 2015, 10:34 pm

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள கடைகளில் தலைக்கவசம் வாங்குவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
 ஜூலை 1 முதல் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளது என்றாலும், சென்னையில் தலைக்கவசம் அதிகம் விற்கப்படும் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், வடபழனி உள்பட முக்கிய இடங்களில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை முதலே தலைக்கவசம் வாங்குவதற்காக இருசக்கர வாகன ஓட்டிகள் குவியத் தொடங்கினர். இதேபோல சாலையோரங்களில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் விற்பனை கடைகளிலும் கணிசமான கூட்டத்தைக் காண முடிந்தது.
 இருமடங்காக உயர்வு: இதுகுறித்து பிரபல நிறுவனங்களின் தலைக்கவசங்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
 ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக குறைந்தபட்சம் ரூ.350 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரையிலான தலைக்கவசங்களை விற்பனை செய்கிறோம். பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள், ஐ.எஸ்.ஐ. முத்திரை, பாதுகாப்பு வசதிகள், பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள், நிறம், வடிவமைப்பு ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு தலைக்கவசங்களை வாகன ஓட்டிகள் தேர்வு செய்கின்றனர்.
 தலைக்கவசங்கள் குறைந்தபட்சம் ரூ.350 முதல் விற்கப்பட்டாலும் பாதுகாப்பு, பிற வசதிகளை கருத்தில் கொண்டு ரூ.700 முதல் ரூ.1,800 வரையிலான தலைக்கவசங்களை அதிகளவில் வாகன ஓட்டிகள் வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக தினமும் 60 முதல் 80 தலைக்கவசங்கள் விற்பனையாகும். தற்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் தலைக்கவசத்தின் விற்பனை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
என்னென்ன வகைகள்? தலைக்கவசத்தைப் பொருத்தவரை தலையை மட்டும் மூடும் ("ஓபன் ஃபேஸ்') ரகம், தலை, முகத்தை முழுவதுமாக மூடும் ("ஃபுல் பேஸ்') வகை, தேவைக்கேற்றவாறு சரி செய்து கொள்ளும் "மாடுயூலர்' வகை, முன்பக்கத்தை மடக்கி விரிக்கும் "ஃபிலிப்' வகை என பல்வேறு வகையான தலைக்கவசங்கள் விற்பனைக்கு உள்ளன.
 தலையை மட்டும் மறைக்கும் "ஓபன் ஃபேஸ்' வகை தலைக்கவசம் கழற்றி மாட்ட எளிதானது. அதிக காற்றோட்ட வசதி கொண்டது. சாலையை தெளிவாக பார்த்து வாகனத்தை ஓட்ட ஏற்றது. மற்ற வகைகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு வசதி சற்று குறைவானதாகும்.
 முன்பகுதியை மடக்கி விரிக்கும் "ஃபிலிப்' வகை தலைக்கவசத்துக்கு இளைஞர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. தலை, முகத்தை முழுவதுமாக மூடும் "ஃபுல் பேஸ்' வகை தலைக்கவசங்கள் தலை, முகம், கழுத்து ஆகிய பகுதிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதுடன், கற்கள், பூச்சிகள், தூசுகளில் இருந்து கண்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன. இந்த வகையான தலைக்கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.
எது சிறந்தது? தலைக் கவசங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துகளின்போது தாடைப் பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இதற்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கும் ஃபுல் பேஸ் வகை தலைக் கவசங்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஏற்றது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.