தேங்காய் மட்டை மஞ்சியில் இருந்து தயாரிக்கும் கயிறுக்கு மவுசு
தென்னை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் பல்வேறு வகையில் மனிதனுக்கு பயன்படுகிறது. தேங்காய் சமையலுக்கும், இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதற்கும் உதவுகிறது. தென்னை மரத்தின்


பழனியருகே மஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் கயிறுக்கு கேரளாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
தென்னை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் பல்வேறு வகையில் மனிதனுக்கு பயன்படுகிறது. தேங்காய் சமையலுக்கும், இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதற்கும் உதவுகிறது. தென்னை மரத்தின் பாளை விசேஷ வீடுகளில் கட்டவும், தோகைகள் கூரைக்கும் பயன்படுகிறது. இவை தவிர இதில் கிடைக்கும் சோகை, பண்ணாடை, மட்டைகள் அடுப்பெரிக்க உதவுகிறது. இவ்வாறு பல்வேறு வகையில் பயன்படும் தென்னை மரத்தின் தேங்காய் மட்டையில் இருந்து பெறப்படும் மஞ்சி மூலமாக கயிறு தயாரிக்கப்படுகிறது. பழனியை அடுத்த ஆயக்குடி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஊர் எல்லையில் சக்கரத்தின் மூலமாக கயிறு திரிக்கப்படுகிறது. இதை பலரும் குடிசைத்தொழில் போல செய்து வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரமாகவும் கயிறு தயாரிக்கும் தொழில் உள்ளது.
தற்போது அதிகமாக கயிறு தயாரிக்கவும், சீராக கயிரின் தரம் இருக்கவும் இயந்திரங்கள் வந்துள்ளன. பழனியை அடுத்த புஷ்பத்தூரில் முருகேசன் என்பவர் கயிறு திரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இங்கு தற்போது 24 மணி நேரமும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் தேங்காய்மஞ்சி ஊற வைக்கப்படு பின் உலர வைத்து இயந்திரம் மூலம் அது பிரிக்கப்படுகிறது. இவற்றை இதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் பணியாளர்கள் கொட்டியபின் இயந்திரமே முழுப்பணியையும் மேற்கொள்கிறது. போதிய அளவு மஞ்சியை எடுத்துக்கொண்டு மூன்று பிரியாக அதை வெளியேற்றி கடையில் ஒரே கயிறாக திரிக்கிறது. இது உருளையில் சீராக சுற்றவும் செய்கிறது. மூன்று பிரியாக வரும் மஞ்சியானது துண்டாகும்போது இயந்திரம் சமிக்ஞை வழங்குகிறது. உடனே நிறுத்தி விட்டு அறுந்த பகுதியை சேர்த்து இயந்திரத்தை ஆன் செய்தவுடன் பணி தொடர்கிறது.
இந்த ஆலையில் மூன்று இயந்திரங்கள் உள்ள நிலையில் இருவர் இப்பணியை கண்காணித்தால் போதுமானது. உருளைகளில் குறிப்பிட்ட அளவு கயிறு சேர்ந்தவுடன் அதை எடுத்து வைத்து விட்டு அடுத்த உருளையை இணைக்கின்றனர். இதில் சேர்ந்த கயிறை வெயிலில் காயவைத்து மற்றொரு உருளையில் சுற்றி குடோனில் சேமிக்கின்றனர். சாதாரண கயிறு ஒரு லாரியில் ஒருடன் வரை ஏற்றும்போது இதே கயிற்றை ஸ்பூலிங் எனப்படும் இறுககட்டும் முறையில் அதே லாரியில் இரண்டு டன் ஏற்றலாம். இதற்கான இயந்திரங்களையும் இவர் வைத்துள்ளார்.
இதுகுறித்து ஆலை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், சிறுதொழிலான இது தற்போது கயிறுக்கு அதிக தேவை இருப்பதால் நல்லமுறையில் இயங்கி வருகிறது. தொழில்துவங்கும்போது வங்கிக்கடனுக்கு அலைந்து இறுதி வரை கடன் கிடைக்கவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். கோடிக்கணக்கில் கடன்வாங்கி கடையில் மஞ்சள் நோட்டீஸ் விடுபவர்களுக்கு வங்கிகள் கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆனால், கடனை முறையாக செலுத்தி ஊரில் நல்லபெயர் எடுக்க வேண்டும் என என்போல் நினைப்போருக்கு வங்கிகடன் கிடைப்பதில்லை.கடையில் சொத்தின் பேரில் கடன் வாங்கி இந்த தொழிலை மேற்கொண்டுள்ளேன். சுமார் 10 பேருக்கு மேல் வேலை கொடுக்கும் திருப்தி உள்ளது. ஒருடன் மஞ்சி சுமார் 22 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை கயிறாக மாற்றி சுமார் ரூ.36 ஆயிரம் வரை விற்கிறோம். மஞ்சியே மூலதனம். அதுவிலை ஏறும் போது கயிறு விலை ஏறும். அது குறையும் போது கயிறு விலை குறையும். மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கு என்றுமே மரியாதை அதிகம். அதேதான் கயிறிலும். கேரளாவில் கயிறை மொத்தமாக வாங்கி தரைவிரிப்பாகவும், கால்மிதியடியாகவும் தயாரிக்கின்றனர்.
மேலும், கேரளாவில் பல இடங்களிலும் மலைப்பகுதியாக இருப்பதால் இதை வலைபோல செய்து சரிவான இடங்களில் கட்டி, அதன்மீது மண் கொட்டி செடிகளை வளர்க்கின்றனர். இதனால் மண்சரிவு தடுக்கப்படுவதோடு, கயிறு மக்கி நிலத்துக்கும் நண்பனாகிறது. ஊட்டி போன்ற ஊர்களில் இதை பின்பற்றினால் மண்சரிவு தடுக்கப்படும். கயிறில் இருந்து தயாரிக்கப்படும் மேட்கள் இத்தாலி, அரபு எமிரேட் நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதாலும், இதற்கு அங்கு அதிக வரவேற்பு அதிகமாகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நாட்டிற்கு மிகப்பெரும் கேடாகும். இதை தவிர்க்க இதுபோன்ற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் கயிறுகளை மக்கள் பயன்படுத்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற தொழில்களை ஊக்குவிக்க வங்கிக்கடன்களை வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...