பழனி பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் தவிர்க்கவும்: மாவட்ட ஆட்சியர்


பழனி பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அனைத்துத்துறை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. பழனி சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலிருந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வருகை புரிகின்றனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக நிழற்பந்தல்கள் பழனி - திண்டுக்கல் சாலையில் 50 இடங்களிலும், மதுரை - பழனி சாலையில் 5 இடங்களிலும், வடமதுரை - ஒட்டன்சத்திரம் சாலையில் 9 இடங்களிலும், தாராபுரம் - பழனி சாலையில் 5 இடங்களிலும், உடுமலைப்பேட்டை - பழனி சாலையில் 5 இடங்களிலும், பழைய தாராபுரம் சாலையில் 3 இடங்களிலும் என ஆக மொத்தம் 50 இடங்களில் தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்படவுள்ளது. மேலும் பாதயாத்திரை வரும் பக்தர்ளின் வசதிக்காக ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி பேரூராட்சிகள் மூலம் குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் போதுமான அளவு ஏற்பாடு செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 350 சிறப்பு பேருந்துகள் சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லவும், தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடாக முக்கிய இடங்களில் 95 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களை கொண்டு சிறப்பு காவல்படையினர் அடங்கிய 2,000 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு வசதியும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கியின் மூலமாக தேவையான அறிவிப்புகள் செய்திடவும், காவல்துறை உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வருவோர் எளிதாக மலை கோவிலுக்கு சென்று வர யானைப்பாதை வழியாக திருக்கோவிலுக்கு சென்றிடவும், படிப்பாதை வழியாக இறங்குவதற்கு ஏதுவாக ஒரு வழிப்பாதையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் குடமுழக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் வசதியைக் கருதி நீண்ட நேரம் காத்திருக்காத வகையில் வடக்கு பிரகாரத்தில் பொது தரிசனத்திற்காக புதிதாக தற்பொழுது நிரந்தர “க்யூ” வரிசையும், சிறப்பு தரிசன வரை வந்து செல்லும் வகையில், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் 28.03.2015-ஆம் தேதி முதல் 06.04.2015-ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசியமான அனைத்து மருந்துகளும், பணியாளர்களும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அவசர ஊர்தியும், தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மலைக்கோவில் பிரகாரங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 15 இடங்களிலும், யானைப்பாதையில் 26 இடங்களிலும், படிப்பாதைகளில் 8 இடங்களிலும், கிரிவீதியைச் சுற்றி 18 இடங்களிலும் தேவையான அளவு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலில் மூன்று நடமாடும் கழிப்பிட வாகனங்களில் உட்பட தேவையான அளவு நிரந்தர கழிப்பறைகள், தற்காலிக கழிப்பறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர முன்னிட்டு பக்தா;கள் அதிக அளவில் முடி காணிக்கை செலுத்துவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காது உடனடியாக முடி இறக்கும் வகையில், முடி கொட்டகைகள் மின் வசதியுடன், திருக்கோவில் உரிமம் பெற்ற முடி இறக்கும் தொழிலாளர்கள் மூலம் இடைவிடாது தொடர்ந்து முடி இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் குடமுழுக்கு நினைவரங்கில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்று சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தேவையான ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பழனி பகுதியில் முற்றிலுமாக பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் மாரியப்பன், உதவி ஆணையர் மேனகா, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பொதுப்பணித்துறை, பழனி நகராட்சி, பொது சுகாதாரம், வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...