பொதுமக்கள் நில ஆவணங்களை செல்லிடப்பேசியில் பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் "அம்மா' இணையவழிச் சேவை செயல்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக இணைய வழியில் பெற்றுக் கொள்ளும் வகையில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் (AMMA e-Service of Land Records - Access and Manage through Mobile from Anywhere e-Service of Land Records) என்ற இணைய வழிச் சேவை செயல்படுத்தப்படும்.
இந்தப் புதிய சேவையை செல்லிடப்பேசி மென்பொருள் (மொபைல் அப்ளிகேஷன்) மூலமாக பதிவிறக்கம் செய்து, அதில் புல எண்களை உள்ளீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட நிலத்தின் வகைப்பாடு, அதன் பட்டா எண் விவரங்களைப் பார்வையிடலாம்.
இந்த சேவையைப் பயன்படுத்தி பட்டா, சிட்டா நகல்களைப் பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள புதிய மின் குறியீட்டை (க்யூ.ஆர். கோட்) பயன்படுத்தி, அதன் உண்மைத்தன்மையை செல்லிடப்பேசி வாயிலாகவே சோதித்து அறிந்துகொள்ளலாம். வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று அதை உறுதிப்படுத்தி கையொப்பம் பெறத் தேவையில்லை.
குறைதீர்க்கும் மென்பொருள்: சேவைகள் தொடர்பாக வழங்கப்படும் மனுக்களின நிலையை அறியவும், அந்த மனுக்களுக்குத் தீர்வு காணவும், இணைய அடிப்படையிலான மென்பொருள் அனைத்து வட்டங்களிலும் தொடங்கப்படும்.
இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தை கண்காணிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக நில அளவைப் பதிவேடுகள் துறையின் 50 உயர் அலுவலர்களுக்கு மடிக்கணினியும், டேட்டா கார்டும் ரூ. 30 லட்சம் செலவில் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடும்ப நலிந்தோர் நிவாரணத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் பொருள் ஈட்டுவோர் இறக்க நேரிட்டால், இப்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தனிப்பட்டா திட்டம்: காஞ்சிபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப்பட்டாவாகப் பிரிக்கும் திட்டம் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும். இந்த இரண்டு மாவட்டங்களில் இதன்படி ஒரு லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும். வருவாய் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் முறையே முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர் என்று பெயர் மாற்றப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

