பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா

பவானிசாகர்  அணையின் நீர்மட்டம் 68.40 அடியாக சரிந்துள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வருவதால்....
Published on
Updated on
1 min read

பவானிசாகர்  அணையின் நீர்மட்டம் 68.40 அடியாக சரிந்துள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 பவானிசாகர் அணையில் இருந்து தற்போது கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் கொடிவேரி வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட ஒரு லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், கொடிவேரி பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கர், காலிங்கராயன் வாய்க்காலில் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் நடந்து வருகிறது.

 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆக.15-ம் தேதியன்று 85 அடியாக இருந்தது. கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு தொடர்ந்து நீர்மட்டம் சரிவடைய தொடங்கியது.

 அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,000 முதல் அதிகபட்சமாக 2,300 கன அடி வரையிலும் தண்ணீர் திறக்கப்படுவதாலும், ஆற்றின் வழியே கொடிவேரி, காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவடைந்து வருகிறது.

 புதன்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 68.40 அடியாக குறைந்து விட்ட நிலையில் அணைக்கு வெறும் 835 கனஅடி மட்டுமே நீர்வரத்தானது. ஆற்றின் வழியே 1,200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது அணையில் மொத்தம் 10.2 டிஎம்சி மட்டுமே நீர்இருப்பு உள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் முதல்வாரம் வரை மட்டுமே தென்மேற்குபருவமழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதன்பிறகு பருவமழை பொய்த்து போனதால் அணைக்கு பெருமளவில் நீர்வரத்து குறைந்த நிலையில் நீர்மட்டமும் வேகமாக சரிவடைந்து வருகிறது.

வழக்கமாக செப்டம்பரில் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரியிலும், கேரளத்திலும் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து நீர்வரத்து அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டதால் கடும் வறட்சியால் நீர்வரத்தும் குறைந்து விட்டது.

இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 68.40 அடியாக குறைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை சீசனாவது கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஈரோடு மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com