கடந்த திமுக ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
"நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை மதுரை மாநகர் பகுதியில் சனிக்கிழமை தொடங்கிய அவர், கோ.புதூர், ஜவஹர்புரம், பி.பீ.குளம், செல்லூர், நரிமேடு, அண்ணா நகர், தெப்பக்குளம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை நாடகம் என சிலர் விமர்சனம் செய்கின்றனர். மக்களின் பிரச்னைகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகத் தெரிந்து கொள்வதே இந்தப் பயணத்தின் நோக்கம். அதேநேரம், மக்களைச் சந்தித்து குறைகளை நேரடியாகக் கேட்கும் தைரியம் ஆளும் கட்சி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இல்லை. சுற்றுப் பயணத்துக்கு ஏராளமான இடையூறு செய்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம்.
மாணவர்கள் அரசியலில் ஈடுபட தேவையில்லை. ஆனால், அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர் சக்திதான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். திமுக முதல் முதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம். வரும் காலங்களில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. குறிப்பாக, தொழில் துறையினர் இப்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அனுமதி, சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் இளைஞர்கள் விரும்புகின்றனர். முந்தைய ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு திமுக துணை நிற்கும். ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கும். திமுக ஆட்சி அமைந்தால், நெசவாளர்களுக்கென சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும். புதிய வடிவமைப்புகளில் ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


