மக்கள் நல கூட்டணியில் குழப்பம் இல்லை. தெளிவாக உள்ளோம்: திருமாவளவன்
1967 வரை காங்கிரஸ் ஆட்சி ஆண்டது. அதன் பின்னர் 2016 வரை திமுக, அதிமுக ஆட்சி செய்தது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிகளில் சக்தி


மக்கள் நலக்கூட்டணியில் குழப்பம் இல்லை. தெளிவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரம் காந்திசிலை அருகே மக்கள் நலக்கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் ஆகியோர் நால்வரும் பங்கேற்று பேசினார்கள்.
தொல்.திருமாவளவன் பேசியது: தமிழக அரசியல் களத்தில் முதல் கூட்டணி அமைத்தது மக்கள் நலக்கூட்டணிதான். முதலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதும் மக்கள் நலக்கூட்டணிதான். கூட்டணியில் சேர யாருக்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை. சிலர் வருவார்கள் என பொறுத்திருக்கிறோம்.
மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி, வரலாறு படைத்த மாநாடாக திகழ்ந்தது. தற்போது மாற்று அரசியல் எழுச்சி பிரசார பயணத்தை கடலூர் மாவட்டத்திலிருந்து தொடங்கியுள்ளோம்.
தமிழக தேர்தல் சூடு பிடிக்கும் முன்பே பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நலக்கூட்டணி, தமிழக அரசியலில் சூடு கிளப்பியுள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம்.
1967 வரை காங்கிரஸ் ஆட்சி ஆண்டது. அதன் பின்னர் 2016 வரை திமுக, அதிமுக ஆட்சி செய்தது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிகளில் சக்தி என்ன என்று தெரியும். ஊழல் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்க உள்ளனர். ஆனால் நாங்கள் மக்கள் பலத்துடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
சாதாரண தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் தர வேண்டும். சத்துணவு அமைப்பாளர் பதவி, ஆயா பதவி, தலையாறி பதவிக்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அனைத்திலும் லஞ்ச மயமாக மாறி உள்ளது. யார் இதற்கு காரணம். திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகள்தான். நாங்கள் கலங்கம் இல்லாமல் ஒன்று சேர்ந்துள்ளோம்.
நீதிமன்றத்திற்கு போகிறவர் அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார். மாற்றம், முன்னேற்றம், சிபிஐ வழக்கு என உள்ளார். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு கூற முடியுமா?
சிதம்பரம் தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டேன். யாருக்காவது நான் இடையூறு செய்தேனா. பல்வேறு பணிகளை தொகுதிக்கு செய்துள்ளேன். ஏதாவது குற்றம் சொல்ல முடியுமா.
வைகோ 25 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார். எங்கள் ஒருவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா? சீரழிவு சக்திகளிடம் தமிழகம் சிக்கியுள்ளது.
தமிழக மக்களை மீட்க பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல். நாங்கள் 4 தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம்.
1999-ல் சிதம்பரம் தொகுதியில் மூப்பனாருடன் இணைந்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது கூறினேன் கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் என குரல் கொடுத்தேன்.
கூட்டணி ஆட்சி அமைக்க திமுக, அதிமுக ஒத்துக்கொள்வார்களா? ஆட்சியில் அதிகார பகிர்வு, கூட்டணி ஆட்சி என்பதை முன்வைத்து மக்கள் நலக்கூட்டணியில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. 4 அல்லது 5 மாவட்டங்களில் கட்சி வைத்திருப்பவர்கள் ஆட்சி அமைப்போம் எனக்கூறுகின்றனர்.
234 தொகுதிகளிலும் கட்சி நடத்தும் நாங்கள் ஏன் ஆட்சி அமைக்க முடியாது. கடலூர் மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...