தவறான அறுவை சிகிச்சையால் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில், தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர், இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.2.75 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், காளியம்மன்கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆ.கருப்பழகு. இவரது மகன் பாலமுருகன் (எ) பாஸ்கரன் (12). இவருக்கு 21.6.2011-ம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். டாக்டர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறவே, ராஜபாளையத்திற்கு பாலமுருகனை அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து வந்துள்ளார்கள். இதன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள், பாலமுருகனை மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்க பரிந்துரைத்துள்ளார்கள்.
ஆனால் கருப்பழகு தனது மகனை, ராஜபாளையம், சம்மந்தபுத்தில் மருத்துவர் சி.கனகராஜ் என்பவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு 26.6.2011-ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர் கனகராஜ், 27-ம் தேதி காலை சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரூ.35 ஆயிரம் செலவாகும் என்று கூறி பணத்தைப் பெற்றுள்ளார். எந்த காரணத்திற்காக அறுவை சிகிச்சை என்று கேட்டதற்கு பதில் கூறாமலும், பெற்றோரின் ஒப்புதல் பெறாமலும் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாம். அறுவை சிகிச்சை அறையிலிருந்து வரும்போதே பாலமுருகன் சுய நினைவு இல்லாத நிலையில் வந்துள்ளார். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. மருத்துவரிடம் முறையிட்டபோது, அவர் ரத்தம் ஏற்ற வேண்டும். ரத்த வங்கிக்கு போன் செய்து கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் சற்று நேரத்தில் பாலமுருகன் உயிரிழந்துவிட்டாராம்.
கருப்பழகு, மருத்துவர் கனகராஜூவிடம் மகனை மருத்துவமனையில் சேர்த்ததற்கான ஆவணம், செலுத்திய கட்டணத்திற்கு ரசீது, அறுவை சிகிச்சைக் குறிப்பு, சிகிச்சை அளித்த குறிப்பு கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர் தர மறுத்துவிட்டாராம். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி கருப்பழகு மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தீப்புரை விவரம்:
மருத்துவர் கனகராஜ், அறுவை சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம் பெறவில்லை என்று கூறியுள்ளார். கருப்பழகு தகவல் அறியும் உரிமை சட்டப்படி அளித்த சிகிச்சை முறை குறித்து மருத்துவக் கவுன்சில் இயக்குநருக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ரூ.35 ஆயிரம் செலுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்கையில் மருத்துவர் கனகராஜ் பணம் பெற்றதை மறுக்கவில்லை. மேலும் இவர் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க இலவச மருத்துவமனை நடத்தவில்லை. அல்லது கருப்பழகு இவருக்கு உறவினரும் இல்லை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர்தான் பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து அவர் கட்டணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை மேற்கொள்பவர், மைனராக இருக்கும்பட்சத்தில், பெற்றோரிடம் சட்டப்படி சம்மதம் பெற வேண்டியது மருத்துவரின் கடமை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் விளைவுகள், வேறு மாற்று சிகிச்சை முறைகள் உள்ளதா என்பதை பெற்றோருக்கு விளக்க வேண்டும். இந்த வழக்கில் எழுத்து மூலமாக அறுவை சிகிச்சைக்கு எந்த சம்மதமும் பெறப்படவில்லை.
பாலமுருகனின் பித்தப்பையில் கல் இல்லை. பித்தப் பை சுவரில் தடிமன் ஏற்பட்டுள்ளது என்பது ஸ்கேன் அறிக்கையில் தெளிவாகியுள்ளது. இதனை லேப்ராஸ்கோபிக் முறையிலோ, ஓப்பன் சர்ஜரி மூலமோ சரி செய்யலாம். லேப்ராஸ்கோபிக் முறையில் ஆபத்து மிகக் குறைவு. ரத்த சேதம் குறைவு. இது குறித்து பெற்றோரிடம் மருத்துவர் கனகராஜ் ஆலோசிக்கவில்லை.
அறுவை சிகிச்சையின்போது, வேறு ரத்தக் குழாய் வெட்டப்பட்டு, ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோருக்கு ஏற்பட்ட இழப்பு, மனக்கஷ்டம், மன வேதனைக்கு இழப்பீடாக மருத்துவர் கனகராஜ், ரூ.2.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து, வசூலாகும் தேதி வரை 6 சதவீதம் வட்டியுடன் தர வேண்டும். மேலும் வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும். இத் தொகைகளை ஒரு மாதத்திற்குள் தர வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.