
மதுரை: சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடு செய்த வழக்கில் பிஆர்பி உள்பட 5 நிறுவனங்கள் மீது இன்று மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து முறைகேடுகள் நடந்ததாக பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் மீது அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து மாற்றப்பட்ட நிலையில் ஆட்சியர்களாக இருந்த சுப்பிரமணியன், அன்சுல் மிஸ்ரா ஆகியோர் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த விசாரணை சரியாக நடக்காததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் ஐ.ஏ.எஸ், அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விரிவான விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனங்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வழக்குகளிலும் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீதான 2 ஆயிரத்து 933 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ. 890 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மேலூர் நீதிமன்றத்தில் இன்று பி. ஆர்.பி கிரானைட்ஸ், ஓம் ஸ்ரீ கிரானைட், ராஜசேகர், ஆர்வி எண்டர் பிரைசஸ் மற்றும் பிகே செல்வராஜ் கண்ணன் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின்மீது அடுத்த கட்டமாக, 3881 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் இந்த நிறுவனங்கலின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு ரூ. 331,71,97,000 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கிரானைட் முறைகேடு பற்றி தொடரப்பட்ட வழக்குகளில் இதுவரை 45 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.