
நவம்பர் 28-ஆம் தேதி முதல் புதிய ரூ.500 நோட்டுகள் எளிதில் கிடைக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.
கோவை பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கும் ஏற்ப மாறுதல்களை செய்யும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள பணி அடுத்த 5 நாள்களில் முடிக்கப்படும்.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்தாலும் அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்த டிசம்பர் கடைசி வரையிலும் அவகாசம் உள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகளில் தற்போது வரை முதலீடு செய்யப்பட்ட தொகை, நிரந்தரமாக வங்கியிலேயே இருக்காது. வைப்புத் தொகையாக வரவு வைக்கப்பட்டதில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மற்றவை மூலதனத் தொகையாக இருக்கும் என்பதால் பரிமாற்றத்திலேயே இருக்கும்.
வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பெரிய அளவிலான தொகைக்கு மட்டுமே வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால், சிறிய வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை. அதேநேரம், வங்கிகளில் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
ஒரே நேரத்தில் வைப்புத் தொகைக்கும், கடனுக்கும் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது. இருப்பினும், கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும்.
நாடு முழுவதிலும் போதுமான அளவுக்கு 100 ரூபாய் நோட்டுகள் இருந்தாலும், அவை தற்போது முடக்கப்பட்டுள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால் அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.
சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வியாழக்கிழமை (நவ. 24) புழக்கத்துக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, கோவை உள்ளிட்ட நகரங்களில் புழக்கத்துக்கு வரும்.
வரும் திங்கள்கிழமை (நவம்பர் 28) முதல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவுகள் இந்த நிதியாண்டின் இறுதியில்தான் தெளிவாகத் தெரியவரும்.
ரூபாய் நோட்டு பிரச்னை உருவானதை அடுத்து கடன் அட்டை, பணம் எடுக்கும் அட்டைகளின் பயன்பாடு, மின்னணு பணப் பரிவர்த்தனை ஆகியவை, எண்ணிக்கை அடிப்படையில் இருமடங்கும், ரொக்க மதிப்பில் 3 மடங்காகவும் உயர்ந்துள்ளன.
அதேபோல, மருத்துவர்களும், பெரிய தனியார் நிறுவனங்களும் சில்லறை வணிகத்தை எளிதாக்குவதற்காக ஸ்வைப் மெஷின் எனப்படும் மின்னணு பணப் பரிமாற்ற இயந்திரங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் 3,600 சுங்கச் சாவடிகளிலும் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. மக்களின் வசதிக்காக நாடு முழுவதிலும் 841 நடமாடும் ஏ.டி.எம். இயந்திரங்கள் நிறுவப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. பணப் பிரச்னையால் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு 10 சதவீதம் வரை மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தாற்காலிகமானதுதான்.
வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் கமிஷன் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு பணம் மாற்றிக் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எஸ்.பி.ஐ. வங்கியில், சேவைக் குறைபாடு தொடர்பான புகார்களால் ஆண்டுக்கு 300 அதிகாரிகள் வரை வேலையை இழக்கின்றனர்.
எனவே, இதுபோன்ற புகார்களில் உண்மை இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிக் கடன் பெறுபவர்களுக்கு, அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற தார்மீக பொறுப்பு இருக்க வேண்டும்.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் அதை முறையாக செலுத்தினால்தான் அதைக் கொண்டு மற்ற மாணவர்களுக்கும் மேற்கொண்டு அவர்களுக்குமே கூட கடன் வழங்க முடியும். ரூபாய் நோட்டு பிரச்னையால் வாராக் கடன் வைத்திருந்த சில நிறுவனங்கள் தங்களது கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் நிலையும் ஏற்பட்டது என்றார் அவர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்று நட்டு வைத்த அருந்ததி பட்டாச்சார்யா, ஆதரவற்றோர் காப்பகத்துக்கு ஆம்புலன்ஸ் வேன் வழங்கினார். மேலும், அவினாசிலிங்கம் அறக்கட்டளைக்கு ரூ. 23.59 லட்சம் உதவித் தொகையையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்கள், தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவியையும் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.