

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த 2015-ஆம் ஆண்டு பூதாகரமாக தலைதூக்கிய குழந்தைகள் கடத்தல் விவகாரம், இப்போது ஆலங்குளம் சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் நிகழாண்டில் விஸ்வரூபமெடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த அருணாசலத்துக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற 2 பெண்கள் உள்பட 7 பேர், மார்த்தாண்டம், கொடுங்குளத்தைச் சேர்ந்த வில்சனுக்கு ரூ. 2.15 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்ற 2 பெண்கள் உள்பட 9 பேர் என மொத்தம் 16 பேரை ஆலங்குளம் போலீஸôர் அண்மையில் கைது செய்திருப்பது இதற்கான சான்றாக அமைந்துள்ளது. 2 குழந்தைகளும் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர்களின் குறி: குழந்தைகள் கடத்தும் கும்பலில் தொடர்புடைய நபர்களின் முக்கிய இலக்காக ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் உள்ளன. வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து குழந்தைகளைப் பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக சாலையோரம் வசிக்கும் குடும்பங்களில் பெற்றோருடன் இரவில் தூங்கும் குழந்தைகள், கோயில்களில் இரவு நேரத்தில் பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகளைக் கடத்துவது இந்தக் கும்பலின் இரண்டாவது இலக்காக அமைந்துள்ளது. சென்னையில் சாலையோரக் குழந்தைகள் கடத்தப்படும் விவகாரம், நடிகர் பார்த்திபனின் முயற்சியால் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
கடத்தல் சம்பவங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது போலீஸôர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடத்தல் எதற்கு? குழந்தைப் பேறு பிரச்னை என்பது அதிகரித்துவிட்டதால், குழந்தையில்லாத தம்பதிகளைக் குறிவைத்து கடத்தல் கும்பல் செயல்படுகிறது. பல ஆண்டுகளாகக் குழந்தையில்லாத ஏக்கத்தில் உள்ள தம்பதிகள், இந்தக் கும்பலின் ஆசை வார்த்தைகளுக்கு எளிதில் சிக்கி விடுகின்றனர். இது மட்டுமல்லாது, பிச்சை எடுத்தல், குழந்தைத் தொழிலாளர்
முறை, பாலியல் குற்றங்கள், உடலுறுப்புகள் திருட்டு, நரபலி உள்ளிட்ட காரணங்களுக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
புள்ளிவிவரங்கள் கூறுவது என்ன? தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரங்களின்படி, 2014-ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 441 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். 2015-ஆம் ஆண்டில் 526 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். 2016-இல் இதுவரை 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக தன்னார்வ அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முன்பைவிட 24 சதவீதம் அதிகரித்துள்ளன. குழந்தை கடத்தல் 43 சதவீதம், சிறுவர் பாலியல் வன்முறை 30 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. நிகழாண்டு மட்டும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் குறித்து 6,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 16.6 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 13.2 சதவீதம், தில்லியில் 12.8 சதவீதம், பிகாரில் 6.7 சதவீதம், ஆந்திரத்தில் 6.7 சதவீதம் என, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன.
குழந்தைகள் கொலை செய்யப்படுவதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 2 குழந்தைகள் கடத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
தடுப்பது எப்படி? குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தலையிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடந்த மாதமே தமிழக அரசுக்கு ஓர் உத்தரவிட்டது. மாவட்டந்தோறும் குழந்தைகள் கடத்தலைத் தடுப்பதற்கென தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாது உள்ளூர், வெளி மாநிலம், வெளிநாடுகள் என நீளும் கடத்தலைத் தடுக்க மாநில அளவில் தனி விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.
இதுதொடர்பாக "சைல்டு லைன்' திட்டத்தைச் செயல்படுத்தும் சரணாலயம் அமைப்பின் இயக்குநர் ஜெயபாலன் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து வந்த அழைப்புகளில் 600 குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கடத்தல் தடுப்பு மசோதா நிறைவேறுமா?
குழந்தைகள், பெண்கள் கடத்தலைத் தடுக்கும் விதத்தில் கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருந்தார். இப்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருவதால், இந்தக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை இருஅவைகளிலும் நிறைவேற்றி, உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
அழைக்கலாம் 1098
குழந்தைகள் தொடர்பான புகார்களை அறிந்து அவர்களுக்கு உடனடியாக உதவிடும் வகையில் மத்திய அரசின் சார்பில், "சைல்டு லைன் இந்தியா பவுண்டேஷன்' என்ற அமைப்பு இயங்கிவருகிறது. தமிழகத்தில் சிவகங்கை, வேலூர் தவிர, இதர 30 மாவட்டங்களிலும் சைல்டு லைன் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பைத் தொடர்புகொள்ள 1098 என்ற இலவசத் தொலைபேசி வசதி உள்ளது.
எங்கிருந்து அழைத்தாலும் இந்த அழைப்பு சென்னைக்கு சென்று, அங்கிருந்து உதவி தேவைப்படும் மாவட்டத்தில் இயங்கும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உதவிகள் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.