கோட்டான்பள்ளம் ஏரியை பறவைகள் சரணாலயமாக்க நடவடிக்கை தேவை

 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள "கோட்டான்பள்ளம்' ஏரியில்...
கோட்டான்பள்ளம் ஏரியை பறவைகள் சரணாலயமாக்க நடவடிக்கை தேவை
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள "கோட்டான்பள்ளம்' ஏரியில், பல்லாயிரக்கணக்கான பறவைகள் எப்போதும் தங்கியிருப்பதால், இந்தப் பகுதியை வனத் துறையினர் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பறவைகள் சரணாலயத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலைக்கு அருகே உள்ளது "கோட்டான்பள்ளம்'. பெரும்பாலையில் இருந்து நாகமரை செல்லும் சாலையிலுள்ள இங்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்ட ஏரி- சுற்றிலும் மலைகள் சூழ- அமைந்திருக்கிறது.
கருவேல மரங்கள் அடர்ந்த இந்த ஏரியில் அரிவாள்மூக்கன், நாரை, நீர்க் காகம், பெலிகான், செங்கால் நாரை, நாமக்கோழி, பழுப்பு நாரை, மயில் உள்ளிட்ட பறவை இனங்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன.
அத்துடன், குரங்குகள், மான்கள், காட்டுப் பன்றிகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது யானைகளையும் சிறுத்தைகளையும் இந்தப் பகுதியில் பார்த்திருப்பதாகக் கூறுகின்றனர் அந்தப் பகுதி பெண்கள்.
பகலில் இரைதேடச் சென்றுவிட்டு மாலை நேரத்தில் திரும்பும் பறவைகள், அந்தப் பகுதியினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சில நேரங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் வந்து தங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
மலைகளையும் சேர்த்து இந்தப் பகுதியை பிரம்மாண்டமான பறவைகள் சரணாலயமாக உருவாக்கினால், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லுக்கு அடுத்த பெரும் சுற்றுலாத் தலமாகவும், பறவைகளைப் பாதுகாக்கும் நல்ல ஏற்பாடாகவும் இருக்கும்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் க. திருமாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
"கோட்டான்பள்ளம்' ஏரியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. வேட்டையைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் வனத் துறைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கி அவ்வப்போது கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்.
சரணாலயம் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு அரசுக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.
இந்த இடத்தைச் சுற்றிலும் பெரிய அளவில் குடியிருப்புகள் இல்லை. எனவே, முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கும், கூடுதல் வசதிகளைச் செய்து தருவதற்கும் வாய்ப்பாக இருக்கிறது "கோட்டான்பள்ளம்'.
இயற்கை எழில் சூழ்ந்த "கோட்டான்பள்ளம்' சரணாலயமானால், மாநிலத்தின் பிரம்மாண்ட ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com